சென்றவாரம் நான் மறுபடியும் ஒரு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இந்த முறை நான் பயணித்த பகுதி - திண்டுக்கல். ஆம், திண்டுக்கல் தான். உடனே, இந்த பதிவு என்ன பூட்டு பற்றியா என்று கேட்காதீர்கள். இந்த பதிவில் திண்டுக்கல் செல்லும் வழியில் இருந்த மணப்பாறை பற்றியும் அந்த ஊருக்கே ஸ்பெஷலான முறுக்கு பற்றியும் தான்.
திண்டுக்கல் பூட்டு பற்றிய பதிவினை விரைவில் காணலாம். அல்லது திண்டுக்கல்லில் இருக்கும் சில பல பிரபலமான முக்கியஸ்தர்களை பற்றியும் உங்களுக்கு விவரங்கள் வேண்டுமெனில் தெரிவிக்கவும் - அதனையும் பதிவாக இட்டு விடலாம்.
இந்த பத்தி தமிழகத்தை சாராத அல்லது இதுவரை திருச்சி பகுதிக்கு பயணிக்காத வாசகர்களுக்காக: மணப்பாறை என்பது திருச்சி நகரில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதாவது, திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மணப்பாறை வரும். என்னை போல காரில் பயணிக்கும் வாசகர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில் நீங்கள் பை-பாஸ் ரோடில் சென்றால் இந்த ஊருக்குள் செல்ல இயலாது. ஆம், ஊருக்கு செல்ல நீங்கள் பை-பாஸ் ரோடில் இருந்து இடது பக்கமுள்ள சாலையில் செல்ல வேண்டும்.
மணப்பாறையில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் நீங்கள் முறுக்கு வாங்க இயலும். இதோ சாம்பிளுக்கு சில பல படங்கள்:
மணப்பாறை என்கிற இந்த ஊரில் மக்கள் அனைவருக்குமே முறுக்கு செய்யும் கலை சிறப்பாக தெரிகிறது. இங்கு எந்த விதமான கருவிகளையும் உபயோகிக்காமல் கையினால் செய்யப்படும் முறுக்கி மிகவும் பிரபலமானது. இதனை கை முறுக்கு என்று அழைக்கின்றனர்.
இங்கு அனைத்து கடைகளிலுமே முறுக்குகள் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனை நான் பலவிதமான கதைகளில் வாங்கி உறுதிப்படுத்திக்கொண்டேன். விலையோ மிகவும் குறிவு. தரமோ அருமை என்று விளம்பரங்களில் வருவது போல அட்டகாசமாக இருக்கிறது. சில பல கடைகளில் முறுக்கு வாங்கி சாப்பிட்டால் சிலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படலாம். அதாவது முறுக்கு செய்ய அவர்கள் உபயோகிக்கும் எண்ணெய் அந்த எரிச்சலை ஏற்படுத்துமாம். இதனாலேயே ஹோட்டல் சரவணா பவனில் ஒருமுறை உபயோகித்த எண்ணையை மறுபடியும் உபயோகிக்க மாட்டார்கள். அதனால் வடபழனி அருகில் இருக்கும் பல நடைவண்டி மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் அந்த உபயோகிக்கப்பட்ட எண்ணையை வந்து கியூவில் நின்று ஹோட்டல் சரவணா பவனில் வாங்கி செல்வார்கள்.
இதனை என் இங்கு சொல்கிறேன் என்றால் இந்த ஊரில் இருந்து நீங்கள் முறுக்கு வாங்கி தின்றால் அந்த நெஞ்சு எரிச்சல் உங்களுக்கு ஏற்படாது.
ஒரு முறுக்கு பாக்கெட் இருபது ருபாய் ஆகும். இந்த இருபது ருபாய் பாக்கெட்டில் இருபத்தி நாலு கைமுறுக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி இருபது ருபாய் பாக்கெட் ஒன்று சென்னையிலோ அல்லது வேறு ஊரிலோ வாங்கினால் அதன் விலை குறைந்தது முப்பது ருபாய் முதல் நாற்பது ருபாய் வரை இருக்கும். விலை குறைவாக இருந்தால் அதன் தரத்தை பற்றி சொல்ல வேண்டி இருக்காது.
இந்த ஊர் மக்கள் அனைவருமே ஒற்றுமையாக இருப்பது மற்றுமொரு சிறப்பு அம்சம் ஆகும். இந்த கை முறுக்குகளை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம், அதுவரை கெடாமல் இருக்குமாம். அனைத்து கடைகளிலுமே ஒரே அச்சில் வார்த்தது போல முறுக்குகள் காணப்பட்டன. கடந்த ஒரு வாரமாக காலையில் டிப்பன் = முறுக்கு, மதிய லஞ்ச் = முறுக்கு, மாலையில் = முறுக்கு, இரவு டின்னர் = முறுக்கு என்றவாறு எனக்கு இனிமையாக கழிந்தது.
முறுக்கு மட்டுமில்லாமல் இன்னும் பலவகையான பலகாரங்கள் இங்கு செய்யப்பட்டு விற்பனையானாலும், கைமுறுக்குகள் மட்டுமே சிறப்பாக பேசப்படுகின்றன. அதற்க்கு காரணம் என்னவென்பதை நான் நேரிடையாகவே ருசி கண்டுவிட்டேன். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் சென்று வாருங்கள். திருச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் உள்ளது மணப்பாறை.
இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நொறுக்கீட்டிங்க தல..,
அருமையான நொறுக்ஸ் தகவல்,அசத்தலான படங்கள்.வாழ்த்துக்கள்!