மக்களே,
சென்றவாரம் நான் மறுபடியும் ஒரு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இந்த முறை நான் பயணித்த பகுதி - எண்டே தேசம் கேரளா. ஆம், கேரளா தான். கேரளா செல்வது என்று முடிவானவுடன் நண்பர்கள் அனைவரிடமும் என்ன வாங்கி வர என்று வினவினால் சொல்லி வைத்தது போல அனைவரும் சொன்ன ஒரே விடயம் - நேத்திரம்பழம் சிப்ஸ்.
என்னடா இது? கேரளத்தில் சிப்சை தவிர வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்டால் கூட முதலில் சிப்ஸ் வாங்கி வாருங்கள், அப்புறம் மற்றவற்றை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே கேரளா சென்று வந்த நண்பர்களிடம் வேறென்ன விசேடம் என்று வினவினால் அவர்கள் கூறுவது - கேரளா அல்வா.
அது என்ன கேரளா அல்வா? நம்ம ஏற்கனவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவையே வாங்கியவர்கள். நமக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? என்று சொன்னால், கேரளா அல்வா முற்றிலும் மாறுபட்டது. அதனை வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள். அதனால் என்னுடைய கேரளா சுற்றுப்பயணத்தை இந்த இரண்டு உயரிய குறிக்கோள்களுடன் ஆரம்பித்தேன் - சிப்ஸ் மற்றும் அல்வா.
அதனால் நான் சிப்சை வாங்கும்போது அதன் செய்முறைவிளக்கத்தையும் தெரிந்துகொள்ள ஒரு சிப்ஸ் தயாரிப்பாளரை அணுகினேன். அவரும் முழு மனதுடன் ஒத்துழைக்க, நான் என்னுடைய சிப்ஸ் பற்றிய பதிவினை முடிவு செய்தேன்.
இந்த படங்களை வரிசைக்கிரமத்தில் பார்த்தாலே உங்களுக்கு செய்முறை விளக்கம் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சிப்ஸ் கடையிலும் இப்படி ஒரு பெரிய அடுப்பை வைத்திருக்கிறார்கள். அந்த அடுப்பின் மேலே ஒரு மிகப்பெரிய வாணலியில் எண்ணையை கொதிக்கவிட்டு அந்த கொதிக்கும் எண்ணையில் நன்கு துருவலாக இருக்கும் வாழைக்காய் துருவலை போட்டு அதனை நன்கு பொன் வருவலாகும் வரை வதக்கி (இது சரியான வார்த்தை தானா? நமக்கு சமையல் செய்து பழக்கம் இல்லை) பின்னர் அந்த வருதெடுககப்பட்ட சிப்சை எடுத்து சிறிது ஆற வைத்து பின்னர் அதனை விற்பனைக்கு தயார் செய்வார்கள்.
கேரளா செல்லும் மக்களே, சிறிது கவனமாக இருங்கள். முன்பு திருநெல்வேலி அல்வாவில் இரண்டு வகை (அசல் மற்றும் போலி) என்று இருந்ததை நாம்தான் தோலுரித்து காட்டினோம். அதனைப்போல இந்த சிப்ஸ் விடயத்திலும் ஒரு அசல் மற்றும் போலி உள்ளது. இந்த இரண்டு படங்களையும் சற்று நன்கு கவனியுங்கள் அசல் மற்றும் போலியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
முதல் படத்தில் இருப்பது போலி சிப்ஸ் ஆகும். இரண்டாவது படத்தில் இருப்பது அசல் கேரளா நேத்திரம்பழம் சிப்ஸ். வித்தியாசம் என்னவெனில் இரண்டாவது சிப்சை சாப்பிடும்போது திகட்டாது. நல்ல எண்ணையில் செய்யப்பட்டு இருக்கும்.
ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இந்த வித்தியாசம் தெரியாது. விலையில் கூட மாற்றம் இருக்கும். அசல் சிப்ஸ் ஒரு கிலோ Rs 120 என்றால், போலி சிப்ஸ் விலை Rs 90 மட்டும்தான். ஆனால் புதிதாக வாங்குபவர்கள் இதனை கண்டு ஏமாந்துவிடக்கூடாது என்றே நான் இதனை இங்கு அளிக்கிறேன்.
ஒவ்வொரு கடையிலும் இரண்டு கண்ணாடி அடைப்பான்களில் சிப்ஸ் வைக்கப்பட்டு இருப்பதை கவனியுங்கள். ஒன்று அசல், மற்றது விஜய், சேச்சே மன்னிக்கவும், போலி.
கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கேரளா செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் (பாலக்காட்டில் தான்) இப்படி வரிசையாக சிப்ஸ் கடைகள் இருக்கின்றன. மக்கள் அனைவரும் அனைத்து பொழுதுகளிலும் வந்து வாங்கி மகிழ்கிறார்கள். அந்த கேரளா அல்வாவை பற்றி சொல்லவே இல்லை என்கிறீர்களா? அதனை சாப்பிடவே முடியவில்லை சார். அப்படியே திகட்டுகிறது. ஆம், முழுக்க முழுக்க தேங்காய் எண்ணையில் செய்யப்பட்டதால் அப்படி ஒரு சுவையாம்.
அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.
வெடிகுண்டு வெங்கட் commented on 14th april 2010: “//உண்மையா இது....எதுவும் காமெடி பண்ணலையே..//இல்லை தல. நேற்றைய ஜூனியர் விகடனில் கூட நம்ம செய்தியை…”
//
என்னா சார்.. ரொம்ப அட்வான்ஸ்சா இருக்கீங்க..
அது எப்படி சார் நீஙக மட்டிம் 14 ஏப்ரலுக்கு போயிட்டீங்க..?
ஆனாலும் சிப்ஸ் சூப்பர்..