குறைந்த தவறுகளை செய்த இந்திய அணி வென்றது - முதல் ஒருநாள் போட்டி Ind Vs NZ, 28-11-2010, Guwahati

மக்களே,

ரொம்ப நாள் கழித்து இன்று நாள் முழுவதும் வீட்லேயே கழிக்கும்படியான ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆகையால் முழுக்க முழுக்க டிவியை பார்த்தே கழிக்க முடிவு செய்தேன். அதில் ஒரு பங்கானது ஆஷஸ் தொடரின் நான்காம் நாளினை பார்பதிலும் இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் முதல் போட்டியை பார்ப்பதிலுமே கழிந்தது.

இந்திய அணி: சச்சின், சேவாக், தோனி, ஹர்பஜன், ஜாகிர் கான், இஷாந்த் ஷர்மா போன்றவர்கள் ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையிலும், காயம் காரணமாக பிரவீன் குமார் இல்லாத நிலையில் புதிய வீரர்களுடன் இந்தி அணி காணப்பட்டது. அணியில் ஆஷிஷ் நெக்ரா (இவரை ஏன் முதன்மை அணியில் அறிவிக்காமல் பிரவீனுக்கு மாற்றாக கொண்டு வந்தார்கள் என்பது புரியாத புதிர்) முனாப் படேல், போன்ற பழைய பந்து வீச்சாளர்களும், ஸ்ரீசாந்த், அஷ்வின் போன்றவர்களுக்கு மறுபடியும் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பாகவும் இது அமைந்தது.

மேலும் மதிய தர வரிசையில் லோயர் ஆர்டரில் வந்து அடித்து ஆடும் வீரரின் தேடுதலில் மறுபடியும் யூசுப் பதானுக்கு மற்றுமொரு வாய்ப்பாக இந்த போட்டி விளங்கியது. இந்த மாற்றங்களில் யாருமே கண்டுக்கொள்ளாதது யுவராஜின் மன நிலையையும், இந்த தொடர் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தான். மத்திய தர வரிசையில் ஐந்தாவது இடத்தில் சமீப காலங்களில்  (ஒரு நாள் போட்டியில் கூட) வேகப்பந்து வீச்சில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கும், தடுத்தாடுவதா அல்லது அடித்தாடுவதா என்ற குழப்பத்தில் இருக்கும் தோனியும், தன்னுடைய வயதிற்கும், திறமைக்கும் சற்றும்கூட தகாத ரோலில் விளையாடி வரும் ஜாடேஜாவும் முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் விளையாடி வருகின்றனர். இதனால் யுவராஜின் நான்காம் இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.

இந்திய அணித் தேர்வாளர்கள் செய்த ஒரே தவறாக நான் கருதுவது விக்கெட் கீப்பராக சாஹாவை கொணர்ந்ததுதான். கடைசியாக நடந்த போட்டியில் (போட்டிகளில்?) தினேஷ் கார்த்திக் சரியாக ஆடாததும், இந்த ஆண்டின் ராஞ்சி டிராபி போட்டிகளில் தடுமாறி வருவதும் இதற்க்கு காரணங்களாக இருக்கலாம். ஆனால் சாஹா அதற்க்கு சரியான ஆள் அல்ல (என்று நான் நினைக்கிறேன்). ஒரு படத்தில் வடிவேலு'வை நோக்கி பலரும் சொல்வது போல "ஊஹும், இதுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்". ஆளே இல்லையென்றும் கூற முடியாது. பார்த்திவ் படேல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாகவே ஆடி வருகிறார்.

நியூசிலாந்து அணி: காயம் காரணமாக ஜெஸ்சி ரைடர் (முழு தொடரும்), பிரெண்டன் மெக்கல்லம் & கேப்டன் வெட்டோரி (இந்த போட்டி மட்டும்) விளையாடாத சூழலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனாலும்கூட, ஸ்காட் ஸ்டைரிசின் மறு வருகை, தான் விளையாடும் போட்டிகளில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை அதிகபடியாக வீழ்த்தியுள்ள டேரில் டப்பி (24 முறை) போன்றவர்களின் வரவால் நியூசிலாந்து அணி சிறப்பாகவே காணப்பட்டது.

டாஸும் ஆடுகளமும்:

பூவா தலையா என்று போட்டு பார்த்ததில் நியூசிலாந்து வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்தது. இது ஒரு சிறப்பான முடிவாகும். காரணங்கள் பின்வருமாறு:

  • காலநிலை காரணமாக காலை எட்டரை மணிக்கே இந்த போட்டியானது ஆரம்பிக்கப்படுகிறது. அவ்வளவு காலையில் பனியும், அதனால் பந்துவீச்சு சற்றே எளிமையாகவும் இருக்கும். ஸ்விங் நன்றாக இருக்கும்.
  • கடந்த முறை இங்கு நடந்த போட்டியில் இந்தியா பரிதாபமாக என்ற நிலையில் இருந்து பிரவீன் குமார் (அட, ஆமாங்க) அடித்த அரை சதத்தில் 174 ரன்னை தொட்டது. இருந்தாலும் கேவலமாகவே தோற்றது (Vs Aus).
  • சச்சின், சேவாக் இருவருமே இல்லாத சூழலில், தன்னுடைய சிறந்த பார்மை தேடிவரும் கம்பீரும், நாற்பது நாளாக ஆடாமல் இருக்கும் விஜய்யும் இந்த காலைவேளை ஆரம்பத்தில் சிரமப்படுவார்கள் என்ற நம்பிக்கை.

அணிகளின் ஒருநாள் போட்டிகள் தரவரிசை:

இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவும், ஏழாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் மோதுவது ஒரு மிஸ்-மேட்ச் போல தோன்றினாலும், இந்தியாவின் முன்னணி வீரர்கள் இல்லாத சூழலில் கிட்டத்தட்ட இது ஒரு சம-பலம் பொருந்திய அணிகளுக்கிடையிலான போட்டியாக நடந்தது.image இந்திய அணி மட்டை பந்தாட்டம்:

முதல் மூன்று ஓவர்களில் தொட்டு, தொட்டு ஒன்றிரண்டாக ஆடிய முரளி விஜய் நான்காவது ஓவரில் ஒரு தவறான நோ பாலில் தன்னுடைய பவுண்டரி கணக்கை துவக்கினார். பின்னர் வந்த பிரீ ஹிட்டிலும் தொடர்ச்சியான ஓவர்களிலும் ஐந்து பவுண்டரிகள் விளாசி பந்துவீச்சை முழுமையாக தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஸ்லாக் ஷாட் அடித்து அருமையான வாய்ப்பை மறுபடியும் கோட்டை விட்டார்.

இதுமாதிரி வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் (ஸ்ரீலங்காவில் டெஸ்ட்டில் ரைனா அடித்த சதம் போலவோ, பெங்களூருவில் புஜாரா விளையாடிய இன்னிங்க்ஸ் போலவோ) ஒரு சிறப்பான இன்னிங்க்சை ஆடினால் தொடர்ந்து அணியில் இருப்பதோடு பல வாய்ப்புகளை பெறலாம். ஆனால் நம்முடைய வீரர்கள் (பத்ரிநாத், முரளி விஜய், அஷ்வின் போன்றோர்) கிடைக்கும் ஓரியு வாய்ப்புகளை சிறப்பாகவே உபயோகப்படுத்துவதில்லை.

Vijay Gambir Yuvi

திடீரென்று ரெய்னா எப்படி ஒரு சதத்தையும், அரை சதமும் அடித்து டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்தார் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. பின்னர் வாய்ப்பில்லை, வாய்ப்பு தரவில்லை என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. உலகக்கோப்பையில் அணியில் இருக்க விரும்பினால் இந்த தொடரில் (கண்டிப்பாக இருவரும் ஐந்து போட்டிகளிலும் விளையாடுவார்கள்) விஜய்'யும் அஷ்வினும் ஒரு ஆட்டநாயகன் விருதிற்கான அளவிற்காவது விளையாட வேண்டும்.அப்போதுதான் உலகக்கோப்பை அணியில் விளையாட முடியும். இல்லையேல் உஹும், வாய்ப்பேயில்லை.

வழக்கமாக சிறிது நேரம் நிலைத்துவிட்டால், பின்னர் ஒரு பெரிய ஸ்கோரை தொடும் காம்பீர் இந்த முறை ஒரு மிகவும் சாதாரணமான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை தானமாக கொடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் சற்றே நிதானமாக ஆடி நாற்பத்தி ரெண்டு ரன்களை எடுத்தார். ஆனால் அவர் தன்னுடைய வழக்கமான அந்த சுதந்திரமான பேட்டிங் ஸ்டைலை காட்சிக்கு வைக்கவில்லை. சற்றே தடுமாறியே விளையாடினார். அணியில் இல்லாத பிரஷர் மற்றும் தன்னுடைய உடல் தகுதி பிரச்சினைகளை தாண்டி அவர் மறுபடியும் விளையாடுவது நன்றாகவே இருந்தாலும், உலகக்கோப்பையை வெல்ல நினைக்கும் இந்திய அணிக்கு சுதந்திரமாக அடித்து விளையாடும் யுவராஜ் மிக, மிக முக்கியமான ஒரு அங்கம். ஆகவே அவர் தன்னுடைய இழந்த அந்த பார்மை மீண்டும் இந்த தொடரின் மீதமிருக்கும் நான்கு போட்டிகளில் பெறுவது மிகவும் அவசியமாகிறது.

MK Virat K NZ

இதற்கிடையில் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் ஏறுமுகமாக இருக்கும் விராட் கோலி இந்த போட்டியில் மிகவும் சாதரணமாக விளையாடி (எந்தவிதமான நிர்பந்தகளுக்கும் இடம் கொடாமல், டென்ஷனே ஆகாமல், அடித்து ஆடவேண்டிய பிரஷர் இல்லாமல்) இரண்டாவதாக தொடர்ந்து சதமடித்தார் (கடந்த ஆஸ்திரேலியா போட்டியில் சதமடித்ததை நினைவுகொள்ளுங்கள்). இது கொலிக்கு நான்காவது சதம். ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தை அசைக்கமுடியாத இடமாக்கிக் கொண்ட கோலி, விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறார்.

டெஸ்ட் தொடரில் ஆறு ரன்கள் என்ற அவேரேஜை கொண்ட ரெய்னா இந்த போட்டியிலும் பிரகாசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் என்ற நிலையில் ஆறு ஓவர்கள் கையிருப்பில் இருக்கையில் 320 என்ற இலக்கமானது சாத்தியமே என்றிருக்கையில் நியூசி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி கடைசி ஆறு விக்கெட்டுகளை 26 ரன்களுக்கு வீழ்த்தினார்கள். மேலும் ஒரு ஓவரை இந்தியா உபயோகப்படுத்தாமல் ஹிமாலயத்தவறாக 49 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டங்களில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பதான், இரண்டு மூன்று முறை விளாசியதோடு சரி. புல் டாசில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தது மிகவும் தவறு. பார்க்கலாம், அடுத்த போட்டியிலாவது இந்த முறை போலில்லாமல் சரியாக ஆடுகிறாரா என்று.

இந்தியாவின் பேட்டிங் - சிறப்பு அம்சங்கள்:

  • முதலில் விஜய்.இவரது அந்த ஆரம்ப ஆட்டம் இல்லாமல் இந்த அளவுக்கு Score வந்திருக்காது.
  • அடுத்ததாக யுவராஜ். சிறப்பாக இல்லையென்றாலும், ரன்களை குவித்து, கொலிக்கு துணையாக நின்றார்.
  • பதான் - கடைசி ஓவர்களில் (எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும்) ஓரளவுக்கு ஆடினார்.

நியூசிலாந்தின் பந்துவீச்சு - சிறப்பு அம்சங்கள்:

  • கைலி மில்ஸ் அற்புதமாக பந்துவீசினார். இவரது ரன் கட்டுபடுத்திய பந்துவீச்சு ஒரு சிறப்பு அம்சம்.
  • கடைசி ஓவரில் பதான் ரன் குவித்தாலும், மேக்கேவின் பந்துவீச்சே இந்தியா முன்னூறு ரன் எடுக்கவிடாமல் தடுத்தது.
  • பீல்டிங் - வழக்கம்போல சூப்பர்.

image

நியூசிலாந்து பேட்டிங்:

ஆரம்பம் சிறப்பாக இருந்தது. ரன்களும் மளமளவென குவிந்தன. ஆனால், ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் நம்ம ஸ்பின்னர் அஷ்வின் தான். பவர் பிளேவில்   சிறப்பாக பந்துவீசி ரன்களை மட்டுப்படுத்தி விக்கெட்டையும் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து வந்த யுவராஜும் சிறப்பாக பந்துவீச, டெய்லரை தவிர மற்றவர்கள் தடுமாறினார். ஒரு கட்டத்தில் டெய்லரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க, தோல்வியின் விளிம்பில் நின்றது நியூசிலாந்து.

ஆனால் மெக்கல்லமும், மில்ஸும் சிறப்பாக ஆடி இந்தியாவை நிலைகுலைய வைத்தனர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து ஜெயித்து விடுமோ என்ற நிலையே வந்தது.  ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுக்க, ஸ்ரீசாந்த் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்தார்.

image

நெஹ்ரா: ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக பந்துவீசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் (ஜாகீர் கானை விட சிறப்பாகவே வீசுகிறார்) ஆக இருக்கும் நெஹ்ரா இந்த ஆட்டத்தில் சற்று சுருதி குறைவாகவே காணப்பட்டார்.

ஸ்ரீசாந்த்: இந்த ஆட்டத்தில் இவரது பந்துவீச்சு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. மூன்று விக்கெட்டுகளை எடுத்தாலும், மைதானத்தின் வகையால் ஸ்விங் ஆகவே இல்லை. இவரது பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானமும் இல்லை. இருந்தாலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான ஒன்று.

அஷ்வின்: என்னுடைய ஆட்டநாயகன். இவரது பந்து வீச்சே இந்தியா ஜெயிக்க முக்கிய காரணி. கடைசியில் மெக்கல்லம் ரன்களை குவித்து இவரது ரன்ரேட்டை மாற்றினாலும், பெஸ்ட் பந்துவீச்சாளர் இவரே.

முனாப் படேல்: சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும், அஷ்வினுடன் சேர்ந்து ஒரு கட்டத்தில் ரன் குவிப்பை மட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை செய்தார்.

யுவராஜ் சிங்: இந்தியாவின் (தற்போதைய நிலையில்) சிறந்த ஆல் ரவுண்டர். இவரது பந்துவீச்சு நாளுக்கு நாள் மேருகேறியே வருகிறது.

ஆஷஸ் தொடர் நான்காம் நாள்: சொதப்பிய ஆஸ்திரேலியாவும், தலைதூக்கிய இங்கிலாந்தும்

மக்களே, 

ஆஷஸ் தொடரானது இந்த வியாயக்கிழமை அன்று ஆரம்பித்தது. அதன் தொடக்கம் பற்றிய எனது பதிவு இதோ: ஆரம்பித்து விட்டது ஆஷஸ் தொடர்.

ஆஷஸ் தொடர் - முதல் நாள்:

மூன்றாவது பந்திலேயே தங்களது அணியின் கேப்டனையும், பார்ம்’படி சிறந்த பேட்ஸ்மனையும் இழந்த இங்கிலாந்து அணி, முதலாவது ட்ரிங்க்ஸ் பிரேக்குக்குள் டிராட்டையும் இழந்து நின்றபோது, நடமாடும் ஈகோ என்று ஷேன் வார்னேவால் அழைக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் ஓரளவுக்கு நன்றாக ஆடி வந்தார். அவருடன் துணை தலைவர் குக்கும் ஆட, நான்கூட இங்கிலாந்து சுதாரிக்கும் என்று நம்பினேன். ஆனால் இரண்டு இடங்களில் அவர்கள் கோட்டை விட்டார்கள்.இந்த கப்பா மைதானமானது வழக்கமாக முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் சொர்க்கம் என்று அழைக்கப்படும். முதல் இரண்டு மணி நேரங்களை சமாளித்து ஆடிவிட்டால், அன்று முழுவதும் ரன் வேட்டைதான் என்பது அங்கு நிலவும் சூழல்.

1. ஒரே ஓவரில் பீட்டர்சனும், பூவர் மேன்'ஸ் டிராவிட் என்றழைக்கப்படும் காலின்வுட்டும் அவுட்டாக திடீரென்று 2/119 என்ற நிலையிலிருந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 4/125 என்று வந்துவிட்டனர்.

2. சரி, அந்த நிலையில் இருந்து சென்ற லோக்கல் மேட்ச்சில் Near இரட்டை சதமடித்த (192)  இயன் பெல்லும், குக்கும் சேர்ந்து ஆடி, ஸ்கோரை இருநூறுக்கு அருகாமையில் கொண்டு சென்றபோதுகூட முன்னூற்றி ஐம்பது என்ற பாதுகாப்பான ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து போவதாக உணர்ந்தேன். ஆனால் பத்து மாதங்கள் கழித்து விளையாட வந்திருக்கும் Peter Siddle அனாயசமாக ஒரு ஹாட் ட்ரிக் எடுத்து இங்கிலாந்தின் லோயர் மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்துவிட்டார். அதிலிருந்து இங்கிலாந்து மீளவே இல்லை. அவர்கள் 260 ரன்னுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தனர்.

இதையும் தாண்டி வேறிரண்டு விஷயங்களை சொல்லியே தீரவேண்டும்: ஒன்று –ve, மற்றொன்று +ve.

  • ரிக்கி பாண்டிங்கின் ரொம்பவும் சாதாரணமான கேப்டன்ஷிப். முதல் நாளில், முதல் ஓவரில் கேப்டனை இழந்த இங்கிலாந்து அணி கொஞ்சம் கூட கஷ்டமே படாமல் ரொம்பவும் சாதாரணமாக ரன்களை குவித்தது. பீல்ட் பிளேஸ்மென்ட்டும், பந்துவீச்சாளர் தேர்வும் ரொம்பவும் சாதாரணம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். ஏதோ கொஞ்சம் லக் இருந்ததால் வாட்சன் ஒரு விக்கெட்டும், சிட்டில் இரண்டு முக்கியமான ஓவர்களில் (லஞ்ச்ச் பிரேக்கிர்க்கு அப்புறம் ஒன்றும், டீ பிரேக்கிர்க்கும் அப்புறம் ஒன்றும்) விக்கெட்டுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாண்டிங்கின் கேப்டன்ஷிப் மீது இருக்கும் கேள்விக்குறி தொடர்ந்திருக்கும்.
  • இரண்டாவது, மைக் ஹஸ்ஸியின் கிரவுண்ட் பிரசன்ஸ். ஆமாம், முதல் நாள் முழுவதும் ஹஸ்சியை பார்க்கையில் தன்னுடைய முதல் டெஸ்ட் விளையாடும் ஒரு டீனேஜரையே காண முடிந்தது. அந்த உற்சாகம் மற்ற வீரர்களிடமும் பரவி ஆஸ்திரேலியா அணி ரொம்ப நாள் கழித்து ஒரு டீம் போல விளையாடியது.  

ஆஸ்திரேலியா 1-0 இங்கிலாந்து (At least, Psychologically)

image

ஆஷஸ் தொடர் - இரண்டாம் நாள்:

முதல் செஷனை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருந்தாலும்கூட இரண்டாம் செஷனில் வாட்சன், பாண்டிங் போன்ற முக்கியமான ஆட்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு கட்டத்தில் 5/143 என்ற நிலைக்கு தள்ளி விட்டனர்.

இந்த இடத்தில் நாம் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்: 

  • விக்கெட் கீப்பர் ஹாடின் பல மாதங்கள் கழித்து ஆடும் முதல் மேட்ச் இது. மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுகிறார்.
  • இரண்டு ஆண்டுகளாக ஹஸ்சி போராடி வருகிறார். சென்ற இந்திய சுற்றுப்பயணத்தின் போதுகூட சொதப்பியதால் அவரின் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.
  • அடுத்து ஆட வரும் வீரர்கள் ஒன்றும் பேட்டிங்கில் ஒன்றும் பிரமாதமாக ஆடுபவர்கள் அல்ல என்பதை கடந்த இந்தியா, பாகிஸ்தான் தொடர்களின் முடிவை பார்த்தாலே தெரியும்.

ஆகையால் இந்த சூழலில் ஒரு ஐம்பது ரன் லீட் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவை மடக்கி இருந்தால் கூட போதும், இங்கிலாந்து ஜெயிக்க பிரகாசமான வாய்ப்பும், முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் ஏற்பட்ட மனோத்தத்துவ அட்வாண்டேஜ்ஜை மறுபடியும் திரும்ப பெறலாம்.

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டே ஆகவேண்டும்:

  • ஒன்று: இங்கிலாந்தின் பந்துவீச்சு. (என்னுடைய கணிப்பில் சற்றே ஓவர் ரேட்டட்) ஸ்பின்னர் ஸ்வான் தடுமாறினார். அல்லது அவரை நிலைகொள்ள ஆஸ்திரேலியா வீரர்கள் விடவில்லை. முதல் ஐந்து ஓவர்களில் முப்பத்தி நான்கு ரன்களை குவித்தனர். அவரை கொஞ்சம் கூட நிலைக்கவே விடாமல் தொடர்ந்து அவரை தாக்கி விளையாடினர். குறிப்பாக ஹஸ்ஸியும், ஹாட்டினும்.
  • அதைப்போலவே மற்றுமொரு விஷயம் - ஆண்டர்சனின் முதிர்ச்சி. சென்ற தொடரில் ஆஸ்திரேலியாவில் தடுமாறிய ஆண்டர்சன் இந்த தொடரில் ஒரு லீடிங் பந்து வீச்சாளர் போலவே பந்து வீசினார்.

End Of Day: Australia - 220/5 in 80.0 overs (MEK Hussey 81, BJ Haddin 22)

என்பது ஓவர்கள் முடிந்ததால் புதிய பந்தை இங்கிலாந்து அணி உபயோகப்படுத்த அமைந்த வாய்ப்பும், சிறிது நேரம் பெய்த மழையால் மறுபடியும் பிரெஷ் ஆகி இருக்கும் மைதானத்தில் புதிய பந்தை உபயோகப்படுத்தும் டைமிங்கும் இங்கிலாந்திற்கு முன்னணியை தந்தன. ஆனால் இங்கேயும் வழக்கத்திற்கு நேர்மாறாகவே நடந்து (இந்த நான்கு நாட்களிலும் அவ்வாறே நடந்து வருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்).

ஆஸ்திரேலியா 1-0 இங்கிலாந்து

ஆஷஸ் தொடர் – மூன்றாம் நாள்: இங்கிலாந்தின் மோசமான மூன்றாவது நாள்.

ஆனால், நடந்தது என்னவோ மற்றுமொரு திருப்புமுனை சம்பவம்: ஆம், ஹஸ்ஸியும் ஹாட்டினும் ஆளுக்கொரு சதமடித்து முன்னூறு ரன்கள் குவித்தனர். இங்கே இரண்டு விஷயங்கள் அதற்க்கு உதவின.

  • ஒன்று:  சில நேரங்களில் கேப்டன்ஷிப் என்பது சேசிங் தி பால் என்று சொல்வார்கள் (அதாவது பந்து எங்கே சென்றதோ, அங்கே பீல்டர்களை வைப்பது, சமீபமாக நம்ம டோனி செய்து வருகிறார்). இந்த மூன்றாவது நாளில் இங்கிலாந்து அதையே செய்தது. அதைப்போலவே பீல்டிங்கிலும் இன்ஸ்பிரேஷன் ஆக எதுவுமே இல்லை.
  • இரண்டு: ஒரு முன்னூறு ரன் பார்ட்னர்ஷிப் நடக்கும்போது வழக்கமாக எதிர் அணி தலைவர்கள் இரண்டு முயற்சிகளை மேற்கொள்வார்கள்: (1) டைட்'ஆக பந்து வீசி, ரன்களை முற்றிலுமாக மட்டுப்படுத்தி, நெகடிவ் லைனில் பீல்டிங் வைத்து, ரன் குவிப்பை தடுப்பதின் மூலம் விக்கெட்டுகளை பெற முயற்சிப்பது (2) அல்லது முற்றிலுமாக அட்டக்கிங் பந்துவீச்சு செய்து விக்கெட்டுகளை எடுக்க முயல்வது.

இங்கிலாந்து இரண்டையுமே செய்யவில்லை.  Australia 2 – 0 England.

பின்னர் நடந்தது என்னவோ வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் (Both for Aus batting & Eng Bowling): கடைசி ஐந்து விக்கெட்டுகள் மட மடவென முப்பது ரன்களுக்கு வீழ்ந்து, சமீபத்து சாதனைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டனர். அசாதாரண உயரத்தில் இருக்கும் ஸ்டீவன் பின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Australiya 2 – 1 England.

கடைசியாக இங்கிலாந்து இருநூறு ரன்கள் பின்னடைவை பெற்று விளையாட வந்த போது அன்றைய ஆடப்போழுது முடிய பதினைந்து ஓவர்கள் இருந்தன. வழக்கமாக இந்த மாதிரி ஓவர்கள் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம். அதுவும் அணியின் தலைவரும், உப தலைவரும் ஒப்பனிங் வீரர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த பதினைந்து ஓவர்களை பொறுமையாக ஆடி (மொத்தம் பத்தொன்போதே ரன்களை எடுத்தாலும்) விக்கெட் இழக்காமல் அன்றைய பொழுதை கழித்தது முதல் பதிலடி.

image

ஆஷஸ் தொடர் – நான்காம் நாள்: ஆஸ்திரேலியாவின் மோசமான நான்காம் நாள்.

இந்த நான்காம் நாள் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். வழக்கம்போல ஆஸ்திரேலியா ஆரம்ப செஷனில் விக்கெட்டுகளை வீழ்த்திடும், இங்கிலாந்து அணி தடுமாறும், ரன்கள் குவிப்பது கஷ்டம், விக்கெட் சுழற்சி எடுக்க ஆரம்பிக்கும் என்றெல்லாம் பல விதமான சிந்தனைகள். ஆனால் இதெல்லாம் நடக்க இப்போது மெக்கிராத்தும், வார்னேவும் இல்லை என்பதையே மக்கள் சுத்தமாக மறந்து விட்டார்கள்.

அதைப்போலவே இப்போது இருக்கும் டோஹர்த்தி என்ற இந்த புதிய ஸ்பின்னர் (என்று அழைக்கபடுகிறார்) பந்தை சுழலவே வாய்ப்பளிக்காமல் நம்ம ஹர்பஜனை விட வேகமாக பந்து வீசுகிறார். ஒரே ஒரு பந்தையத்தின் மூலம் இவரை இந்த முக்கியாமான டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுத்ததின் மூலம் ஆஸ்திரேலியாவின் பெஞ்ச் ஸ்டிரெணத்தை  அறியலாம். இன்றைய நான்காம் நாள் முழுவதுமே ஆஸ்திரேலியா அணியானது ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது என்பது, அந்த அணியின் பலவீனத்தை ஒட்டுமொத்தமாக குன்றிலிட்ட விளக்கு போல தெளிவாக்கிவிட்டது.

  • ஒப்பனிங் பவுலர்களின் ஸ்விங் இயலாமை.
  • மிட்ச்சல் ஜான்சனின் தொடர்ச்சியான மந்தமான ஆட்டம் (பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், ஏன், பீல்டிங்கிலும்கூட).
  • ஒரு முன்னணி, அனுபவம் உள்ள சுழல் பந்து வீச்சாளர் இல்லாதது (ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் பந்து வீசுவது ஒரு கலை, எல்லா ஸ்பின்னராலும் அது முடியாது)
  • பீல்டிங்கில் ஒரு பிரகாசமான ஒரு துவக்கி இல்லாதது (ஒரு இன்ஸ்பிரேஷனல் பீல்டர் - ரெய்னா, காலின்வுட், போல லைவ் வயர்கள்).
  • மந்தமான கேப்டன்ஷிப்.
  • ஒட்டுமொத்த பந்துவீச்சு பெய்லியர்.
  • இங்கிலாந்தின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் ரன்னிங்.
  • இது போன்ற மைதானங்களில் தேவைப்படும் பந்துவீச்சாளர்களின் உயரமின்மை (ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விட குள்ளமே)

image image

Australia 2 – 2 England (both Physically & mentally)

இந்த ஒட்டுமொத்த ஆஷஸ் தொடருமே நாளை நடக்கப்போகும் ஐந்தாம் நாளின் ஆட்டத்தை மைய்யமாக கொண்டே அமையும் என்பது ஏன் கணிப்பு. நாளைய பொழுதினை யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, அவர்களே இந்த தொடரினை வெல்லவும் செய்வார்கள் (என்று நம்புகிறேன்).

ஐந்தாம் நாள் எதிர்பார்ப்புகள்: இங்கிலாந்து அணி

  • ஒன்றரை செஷன்கள் ஆடி, பீட்டர்சன் ரன் குவித்து சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான அந்த பிட்ச்சில் டிக்ளேர் செய்து ஆஸ்திரேலியாவை மன அளவில் வீக் ஆக காட்டுவது, சிறிது லக் இருந்தால் (ஆஸ்திரேலியாவும் ஒத்துழைத்தால்) வெல்ல முயற்சிப்பது.
  • நாளைக்கு இருப்பது தொண்ணூறு ஓவர்கள். அதில் நாற்பது ஓவர்கள் விளையாடி நூற்றி அறுபது (பீட்டர்சன் கலக்கினால் இருநூறு) ரன்கள் குவித்து, மீதமிருக்கும் 48 ஓவர்களில், 250-280 ரன்கள் என்று டார்கெட் வைத்து ஆஸ்திரேலியாவை இன்னமும் பலவீனமாக்கலாம்.
  • அல்லது பீட்டர்சன், காலின்வுட், பிரையர் மற்றும் பிராட்  போன்ற வீர்கள் பேட்டிங் பிராக்டிஸ் பெறச்செய்யலாம். குறிப்பாக பீட்டர்சன் வரப்போகும் போட்டிகளில் கான்பிடென்ட் ஆக விளையாடுவது இங்கிலாந்திற்கு மிகவும் முக்கியம்.

ஐந்தாம் நாள் எதிர்பார்ப்புகள்: ஆஸ்திரேலியா அணி

  • இப்போது அணியில் கலைக்கிடமான நிலையில் இருப்பது மிட்ச்சல் ஜான்சன்தான். போல்லின்ஜர் தயாராக இருக்கும் நிலையில், பந்து வீச்சில் ஜான்சன் பிரகாசிப்பது ஆஸ்திரேலியாவுக்கு மிக, மிக முக்கியம்.
  • ஆஸ்திரேலியாவின் லோவர் ஆர்டரில் அவர் இருப்பது அணிக்கு மிகவும் முக்கியம்.
  • அணியிலேயே மிகவும் வேகமான பந்து வீச்சாளர் முதல் போட்டியிலேயே மொக்கையான ஆட்டத்திறன் மூலம் விலக்கப்படுவது எந்த ஒரு அணிக்குமே நல்லதில்லை.
  • நாளை தேவைப்படுவது ஒரு இன்ஸ்பிரேஷனல் துண்டு. (ஒரு அசாதாரண கேட்ச், ஒரு விளையாடமுடியாத பந்து, ஒரு சிறப்பான பீல்டிங், திடீரென்று ஒரு புதிய பந்து வீச்சாளரின் அறிமுகம், வித்தியாசமான ஒரு பீல்டிங் முயற்சி, ஏதாவது, ஏதாவது).
  • ஷேன் வார்னேவிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஸ்பின்னர் என்றாலே குதிரைக்கொம்பாகி விட்ட சூழலில், கிடைத்த வாய்ப்பை டோஹர்த்தி இன்னமும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், கொஞ்சம் ஸ்லோ ஆக பந்து வீசினாலே போதும், மற்றவைகளை அந்த ஐந்தான் நாள் பிட்ச் பார்த்துக்கொள்ளும்.
  • முதல் செஷனில் இங்கிலாந்தின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களின் முன்னேற்றத்தை தடை படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும், அப்படி செய்தால் ஜெயிக்கவும் ஏதேனும் ஒரு வாய்ப்பு அமையலாம்.
  • என்னதான் இந்தியாவில் மூன்று அரைசதம் அடித்தாலும், பாண்டிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிராவிட்டை விட மோசமாக ஆடி வருகிறார். அவரது ஆட்டத்திறன் மேல் இன்னமும் கேள்வி எழவில்லை என்றாலும் (மற்றவர்கள் அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள்) அவரது தலைமை மீது சரமாரியான தாக்குதல்கள் நடைபெற்றவண்ணமே உள்ளது.
  • இந்த தொடரில் ஜெயிக்க வில்லை என்றால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புதிய கேப்டன் இருப்பது உறுதி (பாண்டிங் டீமில் இருப்பார் - வேறு வழி இல்லை).

வெடிகுண்டின் கணிப்பு: ஒரு டிரா (75% Chance) அல்லது ஆச்சர்யமான இங்கிலாந்து வெற்றி (25% Chance)

நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்

மக்களே,

இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்த படம் என்றாலும்கூட, நேற்று திரையரங்கில் பார்ப்பது ஒரு விசித்திரமான அனுபவம்தான். பலரும் பல விதமாக விமர்சனம் எழுதி இருந்தாலும்கூட படத்தின் ஒரு முக்கியமான காட்சியை பற்றி யாருமே சொல்லவில்லை. அதனால் அந்த ஒரே ஒரு காட்சியை பற்றி மட்டுமே இந்த விமர்சனம்.

ஸ்னிக்தா தான் எப்படி ஒரு விலைமாதுவாக மாறினார் என்பதை விளக்கிய பின்னர், அந்த கொட்டும் மழையில் அந்த பாழடைந்த ரோட்டோர கட்டிடத்தில் மிஸ்கின், சிறுவன் அஸ்வத்ராம், ஸ்னிக்தா, பைகர் பாய்ஸ் இருவர் என்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நாளில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அவர்கள் வாழ்வில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுள்ள அந்த சூழலில், அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் தலையருகே அந்த கருவுற்ற மலைப்பாம்பானது மெல்ல இருளில் இருந்து ஊர்ந்து ஒரு சிறிய வழியின் ஊடே செல்கிறது. அந்த ஒரு காட்சிய ஓராயிரம் ஜென் கதைகளுக்கு மூலம்.

  • அவர்கள் இனிமேல் ஒரு புதிய பாதையில், புதிய வாழ்வை நோக்கி சொல்கிறார்கள் (அந்த சிறிய வழி + கருவுற்ற அந்த பாம்பு)
  • அவர்கள் அனைவருமே மறுபிறப்பு எடுக்கும் நிலையில் இருக்கின்றனர். (கருவுற்ற பாம்பு + மாற்றமடைந்த ஸ்னிக்தாவின் வாழ்க்கை, மாற வைத்ததால் மிஸ்கின் மற்றும் சிறுவனின் முதிர் நிலை)
  • அவர்களுக்கு வாழ்வில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது (ஒரு தாய் கருவுற்று தன வாரிசை ஈனும்போது அந்த வாரிசின் ஊடே தானே வந்ததாக ஒரு மனநிலையை அடைவார்கள். அந்த சூழலில் அந்த பாம்பு மறுபடியும் தான் வாழ்வதாக (இரண்டாவதாக) ஒரு நிலையை நோக்கி செல்கிறது. அதைப்போலவே அந்த மூன்று பாத்திரங்களுமே தங்களின் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பிற்காக காத்திருந்து அந்த கட்டத்திற்குள் நுழைகிறார்கள்).

இப்படியாக ஓராயிரம் காரணங்களை சொல்லி ஒவ்வொரு காட்சியமைப்பின் மூலமும் ஒரு ஜென் கதையை சொல்லலாம்.

இந்த படமானது ஒரு கொண்டாட்டம். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்பதை அந்த மிஸ்கின் பாத்திரம் மூலம் தெளிவாக விளக்குகிறார். அந்த மிஸ்கின் பாத்திரமே ஓர் மந்திரவாதி அல்லது இயேசு கிறிஸ்து போன்ற ஒரு பாத்திரம். மிச்க்கின் பாத்திரம் செல்லும் வழியெல்லாம் யாரையெல்லாம் கடந்து செல்கிறாரோ, அவர்கள் எல்லாரின் வாழ்வும் உடனடியாக மாறிவிடுகிறது.மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: சில அதிக பிரசங்கிகள் இந்த படத்தை கிகுஜிரோவின் காபி என்றெல்லாம் கூறுவார்கள். ஒன்றுமே தெரியாதவர்களின் பேச்சை கண்டுகொள்ளாமல் வாழ்வை கொண்டாடும் இந்த படத்தை இரண்டாவது முறை பார்க்கும்போது புரியும் பல விஷயங்கள் முதல் தடவை புரியாதாகையால் மறுபடியும் ஒரு முறை பாருங்கள்.

ஆரம்பித்து விட்டது ஆஷஸ் தொடர்

மக்களே,

ரொம்ப நாள் கழித்து இன்றுதான் காலையில் அலாரம் எல்லாம் வைத்து ஐந்து மணிக்கே எழுந்துக்கொண்டேன். எதற்க்காக என்றால்? டிவி பார்ப்பதற்கு தான். அதுவும் எனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் மேட்ச் தொடராகிய ஆஷஸ் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த தொடரை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு முன் குறிப்பு: ஆஷஸ் என்பது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் ஒரு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஹோம் அண்ட் அவே என்ற முறையில் ஒரு முறை இங்கிலாந்திலும் மறு முறை ஆஸ்திரேலியாவிலும் 1882ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்க்கு முன்பே கூட இந்த நாடுகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர்கள் நடந்திருந்தாளும்கூட அந்த ஆண்டு முதல் தான் ஆஷஸ் என்ற கணக்கில் வந்தது.

125037.2 பெயர்க்காரணம்:

இங்கிலாந்தில் 1882ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணியினர் இங்கிலாந்தை தோற்கடித்ததே கிடையாது. ஆனால் தி ஓவல் என்ற மைதானத்தில் இந்த ஆண்டுதான் முதன்முதலில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை ஒரு டெஸ்ட் மேட்ச்சில் தோற்கடித்தனர். அப்போது இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு தினசரியானது "இங்கிலாந்து கிரிக்கெட் இறந்து விட்டது, அவர்களின் உடலானது எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகிறது" என்று எழுதி இருந்தனர். அதனை தொடர்ந்து அடுத்த தொடரில் இங்கிலாந்து கேப்டனிடம் ஒரு சிறிய சாம்பல் அடங்கிய குடுவை ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கிரிக்கெட் ஸ்டாம்ப்பின் மேல் இருக்கும் பெயில்ஸ் ஐ எரித்து அதன் சாம்பல் இருப்பதாக நம்பப்படுகிறது. அது முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த இரண்டு நாடுகள் அந்த சாம்பல் அடங்கிய கோப்பையின் மாதிரிக்காக (அட, ஆமாங்க, ஒரிஜினல் கோப்பை லண்டனில் உள்ளது) விளையாடி வருகின்றனர்.

இப்போதைய நிலவரம்:

சமீப ஆண்டுகளில் (சுமார் இருவது ஆண்டுகளாக) ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருந்தது. கடைசியாக இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவில்  ஜெயித்தது 1987ஆம் ஆண்டுதான். கடந்த இரண்டு தொடர்களாக (2005 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்கள்) இங்கிலாந்து ஜெயிதிருந்தாலும்கூட அவை இரண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றவை. ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து ஜெயிக்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

2010 Ashes Link: http://www.espncricinfo.com/the-ashes-2010-11/content/current/series/428730.html

இந்த ஆஷஸ் தொடரின் அட்டவணை:

 

Test Venue Ground Dates IST Timings
1 Brisbane Gabba Thu Nov 25 - Mon Nov 29 05.30 AM
2 Adelaide Adelaide Oval Fri Dec 3 - Tue Dec 7 05.30 AM
3 WACA Perth Thu Dec 16 - Mon Dec 20 08.00 AM
4 Melbourne MCG Sun Dec 26 - Thu Dec 30 05.00 AM
5 Sydney SCG Mon Jan 3 - Fri Jan 7 05.00 AM

கிரிக்கின்போ இணையதளத்தில் இந்த தொடரை தொடர இந்த லின்க்கை உபயோகியுங்கள்: Cricinfo

கடைசி மேட்டர்: இந்த தொடரின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து கேப்டன் ஆண்டிரூ ஸ்டிராஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகியது முதல் ஹைலைட்.

எந்திரன் இரண்டாம் பாகம் - சன் பிக்சர்ஸ் திடீர் அறிவிப்பு.

மக்களே,

சன் பிக்சர்சின் "எந்திரன்" படமானது மகத்தான வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், எப்படி சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்தாரோ, அதைப்போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க மறுத்து விட்டார். ஆனாலும், தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத சன் குழுமத்தினர் இயக்குனர் ஷங்கரை அணுகினார்கள். அவரும் மறுக்க, வேறு வழி இல்லாமல் மற்றொரு ஹீரோவை வைத்து இரண்டாம் பாகம் எடுக்க முடிவெடுத்தனர்.

முதலில் பனிரெண்டு கோடிக்கு நடிக்க ஒப்புக்கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன், பின்னர் ஹீரோ யார் என்று தெரிந்ததும் இலவசமாகவே நடிக்க ஒப்புக்கொண்டது புதுத் தகவல். அதனைப்போலவே, படத்தின் பெயரையும் ஹீரோவின் வாஸ்து, நேமியாலாஜி, மற்றும் ஜாதக பரிபாலனப்படி மாற்றிவிட்டார்கள்.

ஆம், ஹீரோவாக நடிக்கப்போவது வேறு யாருமல்ல, நம்முடைய விஜய டி ராஜேந்தர் அவர்களேதான். அவரே நடிப்பதால், ஷங்கர், இசையமைப்பாளர் A.R. ரஹ்மான், தோட்டா தரணி. வைரமுத்து போன்றவர்கள் இந்த படத்திற்கு தேவையில்லை என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்தனர்.

எந்திரன் படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ரோபோ சிட்டி வெர்ஷன் 2.0 என்பதால், அதனை மறுபடியும் ரகசியமாக ஒருங்கிணைத்து வெர்ஷன் 3.0 என்று ரெடி செய்வதாகவும், அதன் பின்னர் கதை ஆரம்பம் ஆவது போலவும் முடிவெடுத்தனர்.

இதோ லேட்டஸ்ட் எந்திரன் இரண்டாம் பாகத்தின் விளம்பரம்:போனசாக, படத்தின் பஞ்ச் டையலாக்குகள்

endhiran 2

என் பெயர் சட்டி.

மனிதன் உருவம் கொண்ட பன்றி.

Weight 200 KG, Hip Size 54 inches.

எனக்கு உலகில் உள்ள எல்லா கலைகளும் தெரியும்.

மனிதப் பிறவிகளிலேயே உருப்படாத ரெண்டே விஷயம், ஒன்னு நான், இன்னொன்னு என் மகன் சொம்பு.

Related Posts Widget for Blogs by LinkWithin