சாப்பிடும் இடத்தில் சாதி வெறி = ஒரு கொலைவெறி ஹோட்டல்

மக்களே,

இன்றுதான் சென்னை திரும்பிய நானும் என்னுடைய தோழரும் மதிய உணவை குறிவைத்து பயணம் செய்தோம். அப்போது திடீரென்று நண்பருக்கு அபீசியல் போன் கால் ஒன்று வந்து விட நண்பர் சுமார் ஒன்றரை மணி நேரம் அதில் மூழ்கி விட்டார். அதனால் எங்கே செல்வது என்றில்லாமல் நானும் சீருந்தில் அங்கேயும் இங்கேயும் சென்றுக்கொண்டிருந்தேன். சற்றே கவலையான விஷயம் போலும், நண்பர் சிறிது சோகமாகி விட்டார். அதனால் அருகிலுள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடலாம் என்று பார்த்தேன். மைலாப்பூர் மேம்பாலம் அருகில் ஒரு ஹோட்டல் தென்பட்டது.

நானோ முழு சைவம், நண்பரோ லேக்டோ வெஜிடேரியன். அதாவது முட்டை மட்டும் சாப்பிடும் சைவக்காரர். அதனால் அருகில் இருந்த இந்த ஹோட்டலில் நுழைந்தோம். இரண்டு காரணங்கள்: 

1. கார் பார்க் பண்ண இடம் இருந்தது

2. குளிரூட்டப்பட்ட உணவகம், அதாங்க A/C.

 

Image(369)
Image(368)
Image(367)

ஆனால், அங்கு சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்தில் தான் தெரிய வந்தது. ஏ சி ரூமில் சென்றவுடனே தெரிந்தது அது ஒன்றும் சுத்தத்திற்கு பெயர் போன இடமில்லை என்பது. சிறிது நேரம் வெயிட் செய்தவுடன் ஒருவர் வந்து "இன்னா சார் வேணும்?" என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது அவர் அந்த ஹோட்டலில் வேலை செய்பவர் என்று. சரி, ஆளுக்கொரு மீல்ஸ் என்று ஆர்டர் செய்தோம், நண்பர் "முட்டை பிரியாணி" என்று மாற்ற்விட்டு, கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஆனால் அந்த நபரோ, "சார் சைட் டிஷ் ஏதாவது ஆர்டர் பண்ணால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும், இல்லையெனில் வெளியே போங்கள்" என்று சொன்னார். மனம் நொந்த நாங்கள் " அதான் எவ்வளவு சைட் டிஷ் ஆர்டர் செய்துள்ளோமே" என்று கூறியும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. 

சரி முதலாளியிடம் புகார் செய்தால் சரியாகிவிடும் என்றெண்ணி கள்ளப்பெட்டியிடம் சென்றோம். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெள்ளையும் சொள்ளையுமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று கூறியவுடன், அவரும் அதே பல்லவியை பாடினார். நான் வெஜிடேரியன் என்று சொன்னவுடன், அவர் "பரவாயில்லை, ஏதாவது சைட் டிஷ் ஆர்டர் செய்யுங்கள், பிறகு அங்கு A/C ஹாலில் சாப்பிடுங்கள்" என்று மறுபடியும் ஆரம்பித்தார். கடுப்பான நண்பர் "வாப்பா போகலாம், இப்படியே இருந்தால் வெளங்கிடும்" என்று என்னை அழைத்தார். உடனே அந்த வெள்ளை + சொள்ளை கடுப்பாகி விட்டு, "எங்க உங்கள மாதிரி பிராமினை எல்லாம் யார் உள்ளே விட்டது? இது எங்க ஆளுங்க ஹோட்டல்" என்று சாதி பிரச்சினையை தூண்டிவிட்டார். வெஜிடேரியன் என்றாலே அவன் பிராமின்தானா என்ன? என்ன கொடுமை சார் இது? என்று மனம் நொந்து வெளியே வந்தோம்.

மக்களே,

நீங்களே பதில் சொல்லுங்கள். அந்த ஹோட்டலின் வாயிலில் அசைவம் என்று இருந்தும் சாப்பிட சென்றது தவறு என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் பின்னர் நானும் நண்பரும் அருகில் இருந்த ராயப்பேட்டை முனுசாமி ஹோட்டலில் தான் சாப்பிட்டோம். நான் சைவமும், நண்பர் அதே ஆர்டரை ரிபீட் செய்தும் (முட்டை பிரியாணி" , கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று) சாப்பிட்டோம். அங்கே இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இங்கு யாருடைய தவறு? நமதா? அல்லது அந்த ஹோட்டலின் முதலாளியினுடயதா?

சாப்பிட்டு விட்டு வந்தவுடனே இந்த தெருப்பலகை தான் கண்ணில் பட்டது. அதுதான் உடனே புகைப்படம் எடுத்து விட்டேன். இடம், பொருள் எல்லாம் சரியாக வந்த படம் இது.

Image(360)

இப்படி மொக்கையாக இந்த நாள் அமைந்து விட்டதே என்று மவுன்ட் ரோட் சென்றால் அங்கு ஒரு நோட்டிஸ் போர்டை பார்த்து விட்டு இன்னமும் கடுப்பானேன். நீங்களே பாருங்கள் இந்த மொக்கையை.

Image(352)

இப்படி நம்மை ஒரு மொக்கை பாண்டி பிராமிணன் ஆக்கிவிடானே என்று வந்தால் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. என்ன இன்று எல்லாமே விவகாரம்தான் என்று கூட தோன்றியது.

DSC01735

கவனிக்கவும் - இது ஒரு மொக்கை பதிவு. ஆகையால் கமெண்ட் போடலாம்.

காக்காய் வலிப்பும் காலைநேர சென்னைவாசிகளும்

மக்களே,

நேற்று காலை (திங்கட்கிழமை, April மாதம் ஐந்தாம் தேதி) என்னுடைய அடுத்த சுற்றுப்பயணத்தை துவக்க நான் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை சென்றடைந்தேன். அப்போது மணி ஒன்பதரை இருக்கும். லோக்கல் ரயில் நிலையத்தின் மெயின் வாசலில் ஒரு பெரிய கூட்டம் நிற்பதை கண்டேன்.

என்னடா, மக்கள் கூட்டம் இப்படி இருக்கிறதே என்று நம்முடைய கேமரா பார்வையினால் பார்த்த்துக் கொண்டே அருகில் சென்றேன். கூட்டம் அப்படி சூழ்ந்து இருந்தது. அதனால் ஒன்றுமே தெரியவில்லை. ஏதோ, அபிமன்யுவை சூழ்ந்த கவ்ரவர்கள் போல மக்கள் கூட்டம் ஒரு சிறிய வட்டம் அடித்தட்டு நிற்பதை காணுங்கள். அந்த வட்டத்தின் நடுவில் அப்படி என்ன/யார் இருக்கும்?

DSC01772

கூட்டத்தை ஒரு வழியாக விலக்கி கொண்டு சென்றால் நடுவில் ஒரு ஸ்கூட்டரும் ஒரு மனிதரும் இருந்தார்கள் அந்த மனிதரை மக்கள்கூட்டம் எப்படி சூழ்ந்து இருக்கிறது என்பதை பாருங்கள்.அவருக்கு காற்றுகூட கிடைக்காது என்பதைப் போல இருந்தது.

அந்த மனிதர் ஸ்கூட்டரை ஒட்டிக் கொண்டு வந்தபோது திடீரென்று காக்காய் வலைப்பூ  வலிப்பு வந்து அந்த இரும்பு கைப்பிடி மேலே விழுந்து விட்டார். அதனை பார்த்த மாக்கள் சிலர் அவரை தரையில் உட்கார வைத்தனர். அதற்குள் ஒருவர் வந்து "இந்தாங்க, இது ஷீரடி சாய்பாபா விபூதி - இதனை நெற்றியில் இடுங்கள், எல்லாம் சரியாகி விடும்" என்று இன்ஸ்டன்ட் டாக்டரானார். பாருங்கள், மனிதரின் நெற்றியில் விபூதி இருப்பதை. (இந்த சைட் ஏங்களில்-Side Angle- பார்த்தால் நம்ம அதிஷா கொஞ்சம் வயசான மாதிரியே இல்லை?)

DSC01774

ஒரு வழியாக காக்காய் வலிப்பு பற்றி சொல்லி, இரும்பு எல்லாம் தேவை இல்லை. அவருக்கு சுவாசிக்க காற்று கிடைத்தால் போதும் என்பதை விளக்கி மக்களை நகர செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது எனக்கு. இந்த பளபளக்கும் இரும்பு கம்பியின் மீதுதான் அவர் விழ இருந்தார்.

அதற்குள் சிலர் அந்த ஸ்கூட்டரை கையகப் படுத்த நினைத்தனர் (அதில் போலிஸ் என்று எழுதி இருந்தும்). அதனால் அந்த வண்டியின் சாவியை எடுத்து அவரின் பாக்கெட்டில் வைத்தது விட்டேன். பின்னர் அவரை உட்கார செய்தேன். ரெஸ்ட் எடுத்தாலே இந்த வலிப்பு சரியாகி விடும்.

ஒரு வழியாக அந்த கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரின் செருப்புகளை சேகரித்து அவரை அணிய செய்து அவரை சற்று களைப்பாற செய்வதற்குள் கால் மணிநேரம் ஆகிவிட்டது. அதற்குள், "இரும்ப கொடு, கம்பிய விடு" போன்ற புத்திசாலி கமென்ட்டுகளும் காதில் விழுந்தது. அதே நேரத்தில் "அவரை கைத்தாங்கலாக பிடியுங்கப்பா, உட்கார வைங்க, இங்கே வாங்க, தண்ணி கொடுங்க, சோடா சொல்லுங்க" என்று மேனஜர் வேலையும் பலர் பார்த்தனர்.

DSC01777

ஒருவழியாக அவரை சரிபடுத்தி அனுப்பி வைத்த பிறகு தான் நான் யோசித்தேன் - இந்த சூழ்நிலையிலும் கூட மக்கள் காக்காய் வலிப்பு, இரும்பு என்று இருக்கிறார்களே, இன்னுமா அவர்களுக்கு அறிவு வரவில்லை என்று.

அதனால் என்னுடைய நண்பர் டாக்டர் (பாண்ட்) பரத், PGDCA அவர்களை நம்முடைய வெடிகுண்டு பதிவில் வந்து இந்த வலிப்பை பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சொன்னேன்.  Take Over Doctor:

 

  • காக்காய் வலிப்பின் ஆங்கிலப் பெயர் - எபிலெப்சி ஆகும். For Further Reading, Wikipedia Tamil, English
  • இது ஒரு  பொதுவான தீவிரமான நரம்புச் சீர்கேடு ஆகும்
  • மூளையில் நிகழும் அசாதரணமான, மிதமிஞ்சிய, அதே சமயம் குறுகிய காலத்திற்கு தோன்றும் வலிப்புத்தாக்கங்கள் தான் இந்த வலிப்பிற்கு காரணம்.
  • இது ஒரு மருத்துவ குறைபாடே-நோயே ஆகும்.

வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவை: 

  • உடனடியாக அவருக்கு போதிய இடம் அளியுங்கள், சுவாசிக்க காற்று வரவிடுங்கள். அவரை சூழ்ந்து நிற்க வேண்டாம்.
  • அவரின் நாக்கு எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதை கவனியுங்கள். சிலர் வலிப்பின்போது தம்மையறியாமல் நாக்கை கடித்துக்கொள்ளவும் செய்வார்கள்.
  • அவருக்கு மூச்சு திணறல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • பொதுவாக, அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் அந்த வலிப்பின் வீரியம் குறைந்துவிடும். அப்படி குறையாமல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அவசரகால சிகிச்சை அளிக்க வேண்டும்.

வலிப்பின்போது செய்ய கூடாதவை 

  • வலிப்பு வந்தவருக்கு கையிலோ, வாயிலோ எதனையும் திணிக்க வேண்டாம்.
  • குறிப்பாக இரும்பினால் ஆன பொருட்களை கொடுத்தால் அதனால் தன்னைத்தானே காயப்படுதிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
  • வலிப்பு வந்த நபர் முழுமையாக சரியாகாத வரை (அவருக்கு வலிப்பு தானாக நிற்காத வரை) அவரை பலவந்தமாக பிடிக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
  • அவராக அடங்கும்வரை காத்திருக்க வேண்டும். புஜபல பராக்கிரமத்தை காட்டினால், வலிப்பு பாதியில் நின்று உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.

வலிப்பு வந்தவுடன் செய்ய வேண்டியவை

  • வலிப்பிற்கு பிறகு பாதிக்கப்பட்ட நபர் பலவீனமடைதல் & குழப்பமடைதல் பொதுவான ஒன்றாகும். ஏனெனில் அவருக்கு வலிப்பு வந்தது தெரியாது. அவருக்கு தெளிவாக, மறுபடியும், மறுபடியும் "உங்களுக்கு வலிப்பு வந்தது" என்று சொல்லுங்கள்.
  • பாதிக்கப்பட்ட நபர் சாதாரண நடவடிக்கைக்கு மாறும் வரை மற்றொருவர் உடனிருந்து அவருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க வேண்டும்.
  • சிலர் வலிப்பிற்கு பின் வாந்தி எடுப்பார்கள், அதனால் சற்று விலகியே இருங்கள்.
  • வலிப்பிற்கு பிறகு அந்த நபர் சாதாரண விழிப்புணர்வு நிலைக்குத்திரும்ப பலமணி நேரம் ஆகும். அதனால் அவரை தனித்து விடவேண்டாம்.

இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.

Related Posts Widget for Blogs by LinkWithin