தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்களே,

சமீப காலமாக உலக சினிமா ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த பதிவின் சங்கதி இருக்கின்றது. ஆம், நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் ஒரு சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. அதனை பற்றிய விவரங்களையும், துவக்க விழாவின் சிறப்பு அம்சங்களையும் விவரிக்கும் வகையில் இந்த பதிவானது அமைக்கப்பட்டுள்ளது.

ஆம், இன்றுமுதல் சென்னை அண்ணாசாலையில் (ஜெமினி பிளை ஓவரின் கீழே இருக்கும்) பிலிம் செம்ம்பரில் தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா துவங்குகிறது. இந்த விழாவானது, தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும்.

28th October 2010 – Thursday: 01.00 PM – 06.00 PM (2 shows: 01.00 PM & 03.00 PM)

29th October 2010 – Friday: 12.00 Noon – 06.00 PM (2 shows: 12.00 Noon & 03.00 PM)

30th October 2010 – Saturday: 12.00 Noon – 09.00 PM (3 shows: 12.00 Noon, 03.00 PM & 06.00 PM)

31st October 2010 – Sunday: 12.00 Noon – 03.00 PM (International Award Winning Short Films)

இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த விழாவிற்கு வருவதற்கோ, அல்லது படங்களை பார்ப்பதற்க்கோ வருகை கட்டணம் எதுவும் கிடையாது (Entry Free). ஆம், முற்றிலும் இலவசமாக பல திரைப்படங்களை கண்டு கழிக்க விரும்பும் உலக சினிமா ரசிகர்கள் அடுத்த நான்கு நாட்கள் வந்திறங்க வேண்டிய இடம் இதுதான்.

பிலிம் சேம்பரில் தமிழ் நாடு சர்வதேச திரைப்பட விழா துவக்கம் – 28th Oct 2010 - Film Chamber, Anna Salai – Mount Raod

FFOTNI 28102010 Banner
FFOTNI 28102010 Details

பிலிம் சேம்பரில் தமிழ் நாடு சர்வதேச திரைப்பட விழா துவக்கம் - திரையிடப்படும் படங்களின் விவரங்கள்

FFOTNI 28102010 Film List
FFOTNI 28102010 Film List To be shown
பிலிம் சேம்பரில் தமிழ்நாடு சர்வதேச திரைப்படவிழா துவக்கம் - திரையிடப்படும் படங்களின் விவரங்கள் & நேரம்
FFOTNI 28102010 Film Time Table

காலை பதினோரு மணி நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு இந்த திரைவிழா ஆரம்பமாகும் என்று குறிப்பில் இருந்ததால், பதினொன்றரை மணிக்கே வெடிகுண்டார் அங்கே ஆஜராகி விட்டார். (ஆமாம், பின்னே? கழுகார், ஆந்தையார் என்று எல்லோரும் சொல்லும்போது நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?). இந்த விழாவை தொடர்ந்து ஐந்து வருடங்களாக சிறப்பாக (தன்னுடைய கைக்காசை செலவழித்து) நடத்தி வரும் விழா அமைப்பாளர் திரு மாணிக்கம் நாராயணன் (ஆம், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் அவர்களேதான்) அவர்கள் காலை பத்தரை மணிக்கே தன்னுடைய அலுவலகத்தில் இருந்து நாற்காலிகளை கொண்டு வந்து மேடை அமைப்பை பார்த்துக்கொண்டு இருந்தார். சரியாக பதினோரு மணி இருவது நிமிடங்களுக்கு இயக்குனர் திரு மிஷ்கின் அங்கே வந்தார். சர்வதேச அளவில் படங்களை ஒருங்கிணைக்கும் திருமதி க்ளோரியா அவர்களும் நேரத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால், திரு சாரு நிவேதிதா அவர்கள் மட்டும் வராததால் அனைவரும் வெளியிலேயே அவருக்காக காத்துக்கொண்டு இருந்தனர். 

மாணிக்கம் நாராயணம் அவர்கள் நேரம் கடந்து கொண்டிருப்பதால் "ஒரு காரை அவரின் வீட்டிற்கு அனுப்பலாமா"? என்று கேட்கையில் "வேண்டாம், அவர் காரில்தான் வருகிறார்" என்று மிஷ்கின் பதிலளித்தார். சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து பனிரெண்டு ஐந்திற்கு சாரு வந்து சேர்ந்தார். இப்போது ஒரு ரகசியத்தை வெடிகுண்டார் போட்டு உடைக்கப்போகிறார். ஆம், மாணிக்கம் நாராயணன் அவர்களுக்கு சாரு நிவேதிதாவை தெரியாது. அவர் முன்னே, பின்னே பார்த்ததில்லை. ஆகையால், மிஷ்கின் அவரை அறிமுகம் செய்து வைத்தார். இப்போது இரண்டாம் மேட்டர்: இந்த விழாவிற்கு வருவதற்கு தொலைபேசி மூலமாகவே அவர்களை மாணிக்கம் நாராயணன் அவர்கள் அணுகினார்.

தமிழ்நாடு சர்வதேச திரைப்படவிழா துவக்கம் - மாணிக்கம் நாராயணன், இயக்குனர் மிஸ்கின் & சாரு நிவேதிதா

FFOTNI 28102010 Mysskin, manickam Narayanan & Charu

விழாவும் ஒருவழியாக துவங்கியது, இருவது நிமிடங்கள் தாமதமாக. முதலில் மாணிக்கம் நாராயணன் அவர்கள் பேசினார். பின்னர் சாரு நிவேதிதா பேசினார். அதற்க்கு பின்னர் க்ளோரியா அவர்கள் பேசியதும், கடைசியாக இயக்குனர் திரு மிஷ்கின் பேசினார். இனி ஒவ்வொருவரும் பேசியதின் கருத்தாம்சங்கள்  :

மாணிக்கம் நாராயணன்: இவர் மிகவும் சுருக்கமாக பேசினார். ஐந்து நிமிடங்கள் கூட பேசவில்லை. அதில் (வழக்கம்போல) உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு (உண்மையிலேயே), இரண்டு நிமிடங்கள் வேறு பேசாமல் இருந்தார். இயக்குனர் மிஷ்கினை முதலில் சந்தித்தது, வேட்டையாடு விளையாடு படத்தை எடுத்தது, தன்னுடைய முடிவெடுக்கும் திறனை சிலாகித்தது என்று அழகாக பேசினார். தன்னுடைய முன்தினம் பார்த்தேனே படத்தை சிறிது கூறினார். அந்த படத்தை பார்த்து முடித்தவுடன் அதி உணர்ச்சிகள் குறைவாக இருப்பதால் அந்த படத்தை சரியமைக்க இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவி தேவை என்று கோரிக்கையும் வைத்தார். தன்னுடைய தற்போதைய நிலைமை சரிவர இல்லாத காரணத்தால், தன்னால் "நந்தலாலா" படத்தை வெளியிட விரும்பினாலும் (ஐய்ங்கரன் வசம் இருந்து உரிமையை பெற்று), தற்போதைய சூழலால் முடியாது என்று வருந்தினார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த திரைப்பட விழாவை துவக்கும்போது பட்ட கஷ்டத்தையும், அமைச்சர் ரகுபதி அவர்கள் செய்த உதவியையும் நினைவுகூர்ந்தார். இந்த திரைப்பட விழாவானது சினிமா சமூகதிர்ற்கும், ரசிகர்களுக்கும் தன்னால் இயன்ற ஒரு சிறு உதவி என்று பேசி முடித்தார்.

வெடிகுண்டார் தகவல்: இந்த வருடமும் சுமார் மூன்று லட்ச ருபாய் வரை தன்னுடைய சொந்த செலவில் இந்த விழாவை நடத்துகிறார் மாணிக்கம் நாராயணன் அவர்கள். அவரை பாராட்டுவோம்.

 

மேடையில் சாரு நிவேதிதா எந்திரனை ஒரு பிடி பிடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

FFOTNI 28102010 Charu On Dais

சாரு நிவேதிதா: எழுந்து வரும்போதே ஒரு சிறிய பேப்பர் துண்டை தன்னுடைய ஜீன்ஸ் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். கேரளாவில் நடக்கும் பிலிம் பெஸ்டிவலையும், கான் திரைப்பட விழாவையும் பேச ஆரம்பித்தார். பின்னர் பல உலக சினிமா இயக்குனர்களை பற்றி சிலாகிக்க ஆரம்பித்து விட்டார். "நான் ஏன் தாமதமாக வந்தேன்?" என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார். சுருக்கமாக ஆனால் ரசனையாக பேசிக்கொண்டே இருந்த சாரு, திடீரென்று ரஜினிகாந்த்தை பற்றியும் பேச ஆரம்பித்தவுடன் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இது போன்ற விழாக்களை ரஜினி போன்றவர்கள் ஆதரித்து தங்களுடைய சினிமா உலகுக்குக்கான கடமையை செய்ய வேண்டும் என்றார். 

அவரது பேச்சின் அல்டிமேட் செய்தி இதுதான்: இந்திரன் படம் சகிக்கவில்லை. ரஜினி இந்த வயதிலும் ரொமான்ஸ் செய்வது அவருடைய தாத்தாவும், பாட்டியும் டூயட் பாடுவது போல இருக்கிறது என்றார். ரஜினி, அமிதாப் பச்சனை போல சிறந்த, தன்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்றார். சீனி கம் என்ற இந்தி படமும் ரொமான்ஸ் படம்தான், அதனை பாருங்கள் என்றார். கமினே, தேவ் டீ போன்ற படங்களை நமது ஊர் சென்சார் அதிகாரிகள் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்றார். த்ரீ இடியட்ஸ் அங்கு வந்த ஒரு டைம் பாஸ் படம்தான், மற்றபடி உண்மையான இந்தி சினிமா தமிழ் சினிமாவைவிட பல மடங்கு எட்ட முடியாது உயரத்தில் இருக்கிறது என்று கூறினார்.

வெடிகுண்டார் தகவல்: இந்த திரைப்பட விழாவை பற்றிய தகவல் தனக்கு தாமதமாக வந்ததால் தன்னால் ஆனந்த விகடனில் எழுதமுடியவில்லை என்றார்.

க்ளோரியா செல்வநாதன்: இலங்கையில் பிறந்த இவர் தற்போது வசிப்பது ஜெர்மனி என்றாலும் தமிழ் படங்களின் ஆர்வலர் என்றும், உலக சினிமா ஆர்வலர் என்றும் அறிமுகம் செய்துக்கொண்டார். பல உலக சினிமா மேடைகளில் சினிமா பற்றிய விவாதங்களை ஆங்கிலத்தில் உரையாடுவதைவிட இங்கு தமிழில் பேசுவது மிகவும் மகிழ்வாக இருப்பதாக கூறினார். மிகவும் சுருக்கமாக, ஆனால் இனிமையாக பேசினார்.

வெடிகுண்டார் தகவல்: அடுத்த நான்கு நாட்களும் திருமதி க்ளோரியா அவர்கள் இந்த விழாவில் தான் இருப்பார்கள். அவர்களுடன் கலந்துரையாட விரும்புவர்கள் நேரிடையாக வரலாம்.

 

படங்கள் திரையிடப்பட ஆரம்பிக்கப்பட்டபோது அமைப்பாளர் க்ளோரியா செல்வநாதன் அவர்களுடன் மிஸ்கின்

FFOTNI 28102010 Mysskin with Organaiser Gloriana

இயக்குனர் திரு மிஷ்கின்: இவரது பேச்சு தான் இந்த விழாவின் ஹை லைட் (வழக்கம் போல). இவர் பேசிக்கொண்டு இருக்கும்போது கடைசியில் அமர்ந்திருந்த சிலரின் பேச்சு இவரை டிஸ்டர்ப் செய்ததால் அவர்களை வெளியே சென்றோ, அல்லது மேடையில் வந்தோ பேசும்படி கேட்டுக்கொண்டார். தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "நான்தான் அதற்க்கு விடை". என்று பதில் அளித்தார். ஆம், ஒரு நல்ல சினிமாவை எடுத்து விட்டு இரண்டு ஆண்டுகளாக அதனை வெளியிட முடியாமல் இருப்பதிலேயே தமிழ் சினிமா எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உணரலாம் என்றார். எந்திரனை பற்றி சாரு பேசி விட்டார், என்னால் பேச இயலாது என்றார்.

அழுவது என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே. அழுவது என்பது கோழையின் செயல் அல்ல. ஒரு வீரனால் மட்டுமே மேடையில் அழ இயலும் என்று மாணிக்கம் நாராயணன் அவர்கள் உணர்சிவசப்பட்டதை பற்றியும் கூறினார். பின்னர் படங்களை எடுக்கும்போது தான் மறுபடியும் தன்னுடைய தாயின் கருப்பைக்குள்  இருப்பதை போன்றே இருப்பதாக அழகாக கூறினார்.

எனக்கிருப்பது அர்ரோகன்ஸ் (கர்வம்) என்று கூறினார். அது, தன்னுடைய தாயிடமிருந்து தனக்கு வந்தது என்றும், பதினைந்து வருடங்களுக்கு முன்பு அந்த ஒரு குணத்தினாலேயே தான் வீட்டில் இருந்து வெளிவந்ததாகவும் கூறினார். தான் லேண்ட் மார்க்கில் வேலை செய்த நாட்கள் தான் தன்னுடைய வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் என்றார். ஒருவகையில் தான், தன்னுடைய கடைசி இருவது பிறவிகளிலேயுமே நல்லது செய்ததால்தான் இப்போது இந்த வாழ்வில் சினிமாவில் இருப்பதாக கூறினார்.

தன்னுடைய முதல் இயக்குனர்கள் (அவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த பொது) மூலம் தான் எதுவுமே கற்கவில்லை என்றும் கூறினார். பின்னர், விழாவிற்கு வந்திருந்த இரண்டு நபர்களின் பெயரை சொல்லி (பத்திரிக்கையாளர்கள்?) "உடனே பொய், அவர்களிடம் சொல்ல எண்ணாதீர்கள், இதனை நான் அவர்களிடமே கூறுவேன்" என்றும் கூறினார். தான் கற்றுக்கொண்டது அகிரா குரசோவா, சத்யஜித் ரே, மற்றும் கிட்டானோ போன்றவர்களின் படங்களில் இருந்தே என்றார். இதுவரை இரண்டாயிரம் முறை "செவன் சாமுராய்" படத்தை பார்த்திருப்பதாகவும், இன்னமும் ஒரு இரண்டு லட்சம் முறை அந்த படத்தை பார்க்க இருப்பதாகவும் கூறினார்.

கிட்டத்தட்ட இவரது பேச்சு முழுவதுமே ஒரு ஹை லைட் என்பதால் முழு பேச்சையும் வெளியிடுவது கடினம்.

வெடிகுண்டார் தகவல்: தீபாவளிக்கு வெளியாகவிருந்த இவரது நந்தலாலா படம் தீபாவளி படங்களின் வருகையினால்  தியேட்டரில் இடமின்மையால் தீபாவளி கழித்து 2 வாரங்கள் கழித்து வெளிவர இருப்பதையும் கூறினார்.

DSC02162

இந்த தருணத்தில் சாரு நிவேதிதா மறுபடியும் பேச இருப்பதாக மாணிக்கம் நாராயணன் அவர்கள் குறிப்பிட்டார், அப்போது மறுபடியும் பேச வந்த சாரு, நந்தலாலா படத்தை பற்றி சிலாகித்து பேசினார். உடனடியாக பணக்காரர்கள் ஆகவிரும்புவர்கள் அந்த படத்தை எடுத்து வெளியிடலாம் என்று கூறியதுதான் ஹை லைட்.

அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு (குறிப்பாக உலக சினிமா ரசிகர்களுக்கு)  பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன்.

இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Comments

8 Responses to "தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... October 29, 2010 at 7:52 AM

Nice

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... October 29, 2010 at 8:25 AM

தகவலுக்கு நன்றி வெங்கட்! :)

அதி பிரதாபன் said... October 29, 2010 at 9:26 AM

நன்றி வெ.வெ.

கருந்தேள் கண்ணாயிரம் said... October 29, 2010 at 11:49 AM

அட்டகாசமான கவரேஜ்.. !! இந்த விழாவை அட்டெண்ட் செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினேன் :-( .. ஆனால் ஆணி புடுங்குவது அதிகமாகிவிட்டபடியால், முடியவில்லை. அதனால் என்ன.. நீங்கள் இருக்கிறீர்களே.. அட்டெண்ட் செய்யுங்கள்.. அப்டேட்ஸ் வெளியிடுங்கள்..மிக மிக மிக நல்ல முயற்சி இது.. மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா...

உலக சினிமா ரசிகன் said... October 29, 2010 at 1:35 PM

நல்ல பதிவு..அப்படியே படங்களையும் பார்த்து பதிவு போடுங்கள்.மிக்க நன்றி.

மரா said... October 29, 2010 at 1:53 PM

:)

பின்னோக்கி said... October 30, 2010 at 7:46 PM

ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர் போன்று நிகழ்ச்சியை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். அருமை.

அன்பரசன் said... October 31, 2010 at 3:27 PM

நல்ல பதிவு..

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin