குறைந்த தவறுகளை செய்த இந்திய அணி வென்றது - முதல் ஒருநாள் போட்டி Ind Vs NZ, 28-11-2010, Guwahati

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

ரொம்ப நாள் கழித்து இன்று நாள் முழுவதும் வீட்லேயே கழிக்கும்படியான ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆகையால் முழுக்க முழுக்க டிவியை பார்த்தே கழிக்க முடிவு செய்தேன். அதில் ஒரு பங்கானது ஆஷஸ் தொடரின் நான்காம் நாளினை பார்பதிலும் இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் முதல் போட்டியை பார்ப்பதிலுமே கழிந்தது.

இந்திய அணி: சச்சின், சேவாக், தோனி, ஹர்பஜன், ஜாகிர் கான், இஷாந்த் ஷர்மா போன்றவர்கள் ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையிலும், காயம் காரணமாக பிரவீன் குமார் இல்லாத நிலையில் புதிய வீரர்களுடன் இந்தி அணி காணப்பட்டது. அணியில் ஆஷிஷ் நெக்ரா (இவரை ஏன் முதன்மை அணியில் அறிவிக்காமல் பிரவீனுக்கு மாற்றாக கொண்டு வந்தார்கள் என்பது புரியாத புதிர்) முனாப் படேல், போன்ற பழைய பந்து வீச்சாளர்களும், ஸ்ரீசாந்த், அஷ்வின் போன்றவர்களுக்கு மறுபடியும் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பாகவும் இது அமைந்தது.

மேலும் மதிய தர வரிசையில் லோயர் ஆர்டரில் வந்து அடித்து ஆடும் வீரரின் தேடுதலில் மறுபடியும் யூசுப் பதானுக்கு மற்றுமொரு வாய்ப்பாக இந்த போட்டி விளங்கியது. இந்த மாற்றங்களில் யாருமே கண்டுக்கொள்ளாதது யுவராஜின் மன நிலையையும், இந்த தொடர் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தான். மத்திய தர வரிசையில் ஐந்தாவது இடத்தில் சமீப காலங்களில்  (ஒரு நாள் போட்டியில் கூட) வேகப்பந்து வீச்சில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கும், தடுத்தாடுவதா அல்லது அடித்தாடுவதா என்ற குழப்பத்தில் இருக்கும் தோனியும், தன்னுடைய வயதிற்கும், திறமைக்கும் சற்றும்கூட தகாத ரோலில் விளையாடி வரும் ஜாடேஜாவும் முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் விளையாடி வருகின்றனர். இதனால் யுவராஜின் நான்காம் இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.

இந்திய அணித் தேர்வாளர்கள் செய்த ஒரே தவறாக நான் கருதுவது விக்கெட் கீப்பராக சாஹாவை கொணர்ந்ததுதான். கடைசியாக நடந்த போட்டியில் (போட்டிகளில்?) தினேஷ் கார்த்திக் சரியாக ஆடாததும், இந்த ஆண்டின் ராஞ்சி டிராபி போட்டிகளில் தடுமாறி வருவதும் இதற்க்கு காரணங்களாக இருக்கலாம். ஆனால் சாஹா அதற்க்கு சரியான ஆள் அல்ல (என்று நான் நினைக்கிறேன்). ஒரு படத்தில் வடிவேலு'வை நோக்கி பலரும் சொல்வது போல "ஊஹும், இதுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்". ஆளே இல்லையென்றும் கூற முடியாது. பார்த்திவ் படேல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாகவே ஆடி வருகிறார்.

நியூசிலாந்து அணி: காயம் காரணமாக ஜெஸ்சி ரைடர் (முழு தொடரும்), பிரெண்டன் மெக்கல்லம் & கேப்டன் வெட்டோரி (இந்த போட்டி மட்டும்) விளையாடாத சூழலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனாலும்கூட, ஸ்காட் ஸ்டைரிசின் மறு வருகை, தான் விளையாடும் போட்டிகளில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை அதிகபடியாக வீழ்த்தியுள்ள டேரில் டப்பி (24 முறை) போன்றவர்களின் வரவால் நியூசிலாந்து அணி சிறப்பாகவே காணப்பட்டது.

டாஸும் ஆடுகளமும்:

பூவா தலையா என்று போட்டு பார்த்ததில் நியூசிலாந்து வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்தது. இது ஒரு சிறப்பான முடிவாகும். காரணங்கள் பின்வருமாறு:

  • காலநிலை காரணமாக காலை எட்டரை மணிக்கே இந்த போட்டியானது ஆரம்பிக்கப்படுகிறது. அவ்வளவு காலையில் பனியும், அதனால் பந்துவீச்சு சற்றே எளிமையாகவும் இருக்கும். ஸ்விங் நன்றாக இருக்கும்.
  • கடந்த முறை இங்கு நடந்த போட்டியில் இந்தியா பரிதாபமாக என்ற நிலையில் இருந்து பிரவீன் குமார் (அட, ஆமாங்க) அடித்த அரை சதத்தில் 174 ரன்னை தொட்டது. இருந்தாலும் கேவலமாகவே தோற்றது (Vs Aus).
  • சச்சின், சேவாக் இருவருமே இல்லாத சூழலில், தன்னுடைய சிறந்த பார்மை தேடிவரும் கம்பீரும், நாற்பது நாளாக ஆடாமல் இருக்கும் விஜய்யும் இந்த காலைவேளை ஆரம்பத்தில் சிரமப்படுவார்கள் என்ற நம்பிக்கை.

அணிகளின் ஒருநாள் போட்டிகள் தரவரிசை:

இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவும், ஏழாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் மோதுவது ஒரு மிஸ்-மேட்ச் போல தோன்றினாலும், இந்தியாவின் முன்னணி வீரர்கள் இல்லாத சூழலில் கிட்டத்தட்ட இது ஒரு சம-பலம் பொருந்திய அணிகளுக்கிடையிலான போட்டியாக நடந்தது.image இந்திய அணி மட்டை பந்தாட்டம்:

முதல் மூன்று ஓவர்களில் தொட்டு, தொட்டு ஒன்றிரண்டாக ஆடிய முரளி விஜய் நான்காவது ஓவரில் ஒரு தவறான நோ பாலில் தன்னுடைய பவுண்டரி கணக்கை துவக்கினார். பின்னர் வந்த பிரீ ஹிட்டிலும் தொடர்ச்சியான ஓவர்களிலும் ஐந்து பவுண்டரிகள் விளாசி பந்துவீச்சை முழுமையாக தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஸ்லாக் ஷாட் அடித்து அருமையான வாய்ப்பை மறுபடியும் கோட்டை விட்டார்.

இதுமாதிரி வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் (ஸ்ரீலங்காவில் டெஸ்ட்டில் ரைனா அடித்த சதம் போலவோ, பெங்களூருவில் புஜாரா விளையாடிய இன்னிங்க்ஸ் போலவோ) ஒரு சிறப்பான இன்னிங்க்சை ஆடினால் தொடர்ந்து அணியில் இருப்பதோடு பல வாய்ப்புகளை பெறலாம். ஆனால் நம்முடைய வீரர்கள் (பத்ரிநாத், முரளி விஜய், அஷ்வின் போன்றோர்) கிடைக்கும் ஓரியு வாய்ப்புகளை சிறப்பாகவே உபயோகப்படுத்துவதில்லை.

Vijay Gambir Yuvi

திடீரென்று ரெய்னா எப்படி ஒரு சதத்தையும், அரை சதமும் அடித்து டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்தார் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. பின்னர் வாய்ப்பில்லை, வாய்ப்பு தரவில்லை என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. உலகக்கோப்பையில் அணியில் இருக்க விரும்பினால் இந்த தொடரில் (கண்டிப்பாக இருவரும் ஐந்து போட்டிகளிலும் விளையாடுவார்கள்) விஜய்'யும் அஷ்வினும் ஒரு ஆட்டநாயகன் விருதிற்கான அளவிற்காவது விளையாட வேண்டும்.அப்போதுதான் உலகக்கோப்பை அணியில் விளையாட முடியும். இல்லையேல் உஹும், வாய்ப்பேயில்லை.

வழக்கமாக சிறிது நேரம் நிலைத்துவிட்டால், பின்னர் ஒரு பெரிய ஸ்கோரை தொடும் காம்பீர் இந்த முறை ஒரு மிகவும் சாதாரணமான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை தானமாக கொடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் சற்றே நிதானமாக ஆடி நாற்பத்தி ரெண்டு ரன்களை எடுத்தார். ஆனால் அவர் தன்னுடைய வழக்கமான அந்த சுதந்திரமான பேட்டிங் ஸ்டைலை காட்சிக்கு வைக்கவில்லை. சற்றே தடுமாறியே விளையாடினார். அணியில் இல்லாத பிரஷர் மற்றும் தன்னுடைய உடல் தகுதி பிரச்சினைகளை தாண்டி அவர் மறுபடியும் விளையாடுவது நன்றாகவே இருந்தாலும், உலகக்கோப்பையை வெல்ல நினைக்கும் இந்திய அணிக்கு சுதந்திரமாக அடித்து விளையாடும் யுவராஜ் மிக, மிக முக்கியமான ஒரு அங்கம். ஆகவே அவர் தன்னுடைய இழந்த அந்த பார்மை மீண்டும் இந்த தொடரின் மீதமிருக்கும் நான்கு போட்டிகளில் பெறுவது மிகவும் அவசியமாகிறது.

MK Virat K NZ

இதற்கிடையில் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் ஏறுமுகமாக இருக்கும் விராட் கோலி இந்த போட்டியில் மிகவும் சாதரணமாக விளையாடி (எந்தவிதமான நிர்பந்தகளுக்கும் இடம் கொடாமல், டென்ஷனே ஆகாமல், அடித்து ஆடவேண்டிய பிரஷர் இல்லாமல்) இரண்டாவதாக தொடர்ந்து சதமடித்தார் (கடந்த ஆஸ்திரேலியா போட்டியில் சதமடித்ததை நினைவுகொள்ளுங்கள்). இது கொலிக்கு நான்காவது சதம். ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தை அசைக்கமுடியாத இடமாக்கிக் கொண்ட கோலி, விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறார்.

டெஸ்ட் தொடரில் ஆறு ரன்கள் என்ற அவேரேஜை கொண்ட ரெய்னா இந்த போட்டியிலும் பிரகாசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் என்ற நிலையில் ஆறு ஓவர்கள் கையிருப்பில் இருக்கையில் 320 என்ற இலக்கமானது சாத்தியமே என்றிருக்கையில் நியூசி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி கடைசி ஆறு விக்கெட்டுகளை 26 ரன்களுக்கு வீழ்த்தினார்கள். மேலும் ஒரு ஓவரை இந்தியா உபயோகப்படுத்தாமல் ஹிமாலயத்தவறாக 49 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டங்களில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பதான், இரண்டு மூன்று முறை விளாசியதோடு சரி. புல் டாசில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தது மிகவும் தவறு. பார்க்கலாம், அடுத்த போட்டியிலாவது இந்த முறை போலில்லாமல் சரியாக ஆடுகிறாரா என்று.

இந்தியாவின் பேட்டிங் - சிறப்பு அம்சங்கள்:

  • முதலில் விஜய்.இவரது அந்த ஆரம்ப ஆட்டம் இல்லாமல் இந்த அளவுக்கு Score வந்திருக்காது.
  • அடுத்ததாக யுவராஜ். சிறப்பாக இல்லையென்றாலும், ரன்களை குவித்து, கொலிக்கு துணையாக நின்றார்.
  • பதான் - கடைசி ஓவர்களில் (எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும்) ஓரளவுக்கு ஆடினார்.

நியூசிலாந்தின் பந்துவீச்சு - சிறப்பு அம்சங்கள்:

  • கைலி மில்ஸ் அற்புதமாக பந்துவீசினார். இவரது ரன் கட்டுபடுத்திய பந்துவீச்சு ஒரு சிறப்பு அம்சம்.
  • கடைசி ஓவரில் பதான் ரன் குவித்தாலும், மேக்கேவின் பந்துவீச்சே இந்தியா முன்னூறு ரன் எடுக்கவிடாமல் தடுத்தது.
  • பீல்டிங் - வழக்கம்போல சூப்பர்.

image

நியூசிலாந்து பேட்டிங்:

ஆரம்பம் சிறப்பாக இருந்தது. ரன்களும் மளமளவென குவிந்தன. ஆனால், ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் நம்ம ஸ்பின்னர் அஷ்வின் தான். பவர் பிளேவில்   சிறப்பாக பந்துவீசி ரன்களை மட்டுப்படுத்தி விக்கெட்டையும் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து வந்த யுவராஜும் சிறப்பாக பந்துவீச, டெய்லரை தவிர மற்றவர்கள் தடுமாறினார். ஒரு கட்டத்தில் டெய்லரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க, தோல்வியின் விளிம்பில் நின்றது நியூசிலாந்து.

ஆனால் மெக்கல்லமும், மில்ஸும் சிறப்பாக ஆடி இந்தியாவை நிலைகுலைய வைத்தனர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து ஜெயித்து விடுமோ என்ற நிலையே வந்தது.  ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுக்க, ஸ்ரீசாந்த் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்தார்.

image

நெஹ்ரா: ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக பந்துவீசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் (ஜாகீர் கானை விட சிறப்பாகவே வீசுகிறார்) ஆக இருக்கும் நெஹ்ரா இந்த ஆட்டத்தில் சற்று சுருதி குறைவாகவே காணப்பட்டார்.

ஸ்ரீசாந்த்: இந்த ஆட்டத்தில் இவரது பந்துவீச்சு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. மூன்று விக்கெட்டுகளை எடுத்தாலும், மைதானத்தின் வகையால் ஸ்விங் ஆகவே இல்லை. இவரது பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானமும் இல்லை. இருந்தாலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான ஒன்று.

அஷ்வின்: என்னுடைய ஆட்டநாயகன். இவரது பந்து வீச்சே இந்தியா ஜெயிக்க முக்கிய காரணி. கடைசியில் மெக்கல்லம் ரன்களை குவித்து இவரது ரன்ரேட்டை மாற்றினாலும், பெஸ்ட் பந்துவீச்சாளர் இவரே.

முனாப் படேல்: சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும், அஷ்வினுடன் சேர்ந்து ஒரு கட்டத்தில் ரன் குவிப்பை மட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை செய்தார்.

யுவராஜ் சிங்: இந்தியாவின் (தற்போதைய நிலையில்) சிறந்த ஆல் ரவுண்டர். இவரது பந்துவீச்சு நாளுக்கு நாள் மேருகேறியே வருகிறது.

Comments

3 Responses to "குறைந்த தவறுகளை செய்த இந்திய அணி வென்றது - முதல் ஒருநாள் போட்டி Ind Vs NZ, 28-11-2010, Guwahati"

vimal said... November 29, 2010 at 8:36 PM

Match paatha madhiri irundhudhu sir

Nice narration

ஹரிஸ் Harish said... November 29, 2010 at 10:45 PM

அருமையான எழுத்து நடை..பத்திரிகைகளில் படிப்பதை விட நிறைய தகவல்கள்,,

பித்தனின் வாக்கு said... November 30, 2010 at 8:05 AM

நல்ல விமரிசன நடை. நான் கூட இப்படி மேட்ச் பார்த்தது இல்லை. இனிமேல் பார்க்கும் போது ஸ்விங்க் பற்றி எல்லாம் பர்ப்ப்பேன். நன்றி.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin