மக்களே,
ரொம்ப நாள் கழிச்ச்சு இன்னைக்கு தான் சென்னையில் ஒரு சன்டேவை கழித்தேன். வழக்கம் போல எங்கும் போகாமல் வீட்டிலேயே கழிக்கலாம் என்று நினைத்து தொலைக்காட்சியை ஆன் செய்து காமெடி அல்லது மியூசிக் சேனல் பக்கம் போனால் ஒரு விந்தை காணப்பட்டது. ஆம், வழக்கமாக ரெண்டு பாட்டுக்கு ஒரு முறை விளம்பர பிரேக் எடுக்கும் இசை அருவி மற்றும் சிரிப்பொலி சேனல்களில் இன்று விளம்பரங்களே காணப்படவில்லை. (மிதமாக இரண்டு மூன்று குழும விளம்பரங்களே வந்தன). சரிதான், என்னமோ விஷயம் என்று விசாரித்தேன். அதன் பின்னணியே இன்றைய இந்த பதிவு.
கலைஞர் தொலைக்காட்சி முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப் பட்டபோது தொடர்ச்சியாக மூன்று நான்கு சேனல்கள் ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இசை அருவி என்ற மியூசிக் சேனல் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழக தொலைக் காட்சி வரலாற்றில் இல்லாத ஒரு புதுமையாக அந்த சேனலை மார்க்கெட் செய்யும் பொறுப்பை வேறு ஒரு தனியார் நிர்வாகத்திடம் மினிமம் கியாரேன்டி முறையில் ஒப்படைக்கப்பட்டது.
அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனமே சோசியல் மீடியா இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம் நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய அமைப்பாகும். இந்த நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் சுமார் ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள ஒரு மிகப்பெரிய இன்டர்நெட் துறை சார்ந்த நிறுவனமாகும். அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் கலைஞர் நிர்வாகம் சென்னையில் முரசு என்ற கேபிள் சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பை இந்த சோசியல் மீடியாவிடமே ஒப்படைத்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட சிரிப்பொலி என்ற காமெடி சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப் பட்டது. கலைஞர் குழும நிழலாகவே இவர்கள் கருதப்பட்டார்கள். ஆரம்பித்த சில நாட்களிலேயே இசை அருவி சேனல் சிறப்பாக செயல்பட்டு சன் மியூசிக் சேனலை ஆட்டம் காண வைத்தது (டி.ஆர.பி ரேட்டிங் மற்றும் விளம்பர வருவாய் - இரண்டிலுமே).
ஆம், எந்த ஒரு துறையிலும் முதன்மையாக இருக்கும் சன் குழும சேனலை ஆட்டம் காண வைத்தது இந்த இசை அருவி சேனல். முதன் முறையாக மியூசிக் சேனல்களில் முதல் ரேட்டிங் பெற்று சன் குழுமத்தினரை ஆட்டம் காண வைத்தது. மேலும் சோசியல் மீடியா நிர்வாகத்தினர் புதுமையாக பல நிகழ்ச்சிகளை செய்து (தமிழ் மியூசிக் அவார்ட்ஸ், பல சிறப்பு நிகழ்வுகள் என்று) தமிழக மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தனர்.
ஆனால் திடீரென்று சனிக்கிழமை அன்று கலைஞர் டிவி நிர்வாகம் அவர்களின் காண்டிராக்டை முறித்துக்கொண்டது, அதுவும் உடனடியாக. இதில் உடனடியாக என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்த தீபாவளி சீசனில் பலரும் விளம்பரத்தில் குறியாக இருக்கும் போது திடீரென்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது வரை கொடுத்து உள்ள விளம்பரங்கள் அனைத்தும் கேன்சல் செய்யப் பட்டு இன்று முதல் அனைத்து விளம்பரங்களும் கலைஞர் டிவி நிர்வாகத்திடம் மட்டுமே புக் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதோ, அதனை உறுதிப்படுத்தும் கடிதம்.
இதன் காரணமாக இன்று (அதாவது ஞாயிற்றுகிழமை) ஆச்சரியமாக கலைஞர் டிவி மார்கெட்டிங் குழு பணிக்கு வந்தார்கள். வந்து அவர்கள் அனைவரிடமும் புதிய விளம்பர ஒப்பந்தங்கள் செய்து அதன் பின்னரே விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. பின் குறிப்பு: எதற்காக இந்த மாற்றம் என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து இதுவரை தகவல்கள் வராததால் எதனையும் உறுதிப்படுத்தி கூற இயலவில்லை.
அதே சமயம் சில பல ரூமர்கள் / வதந்திகள் உலவுகின்றன. அவற்றை மட்டும் இங்கே அளிக்கிறேன். கவனிக்கவும், இவை உறுதிப்படுத்தப்படாதவை.
1. மினிமம் கியாரேன்டி கடந்த நான்கு மாதங்களாக தரப்படவில்லையாம். பல நினைவுருத்தல்களுக்கு பின்னரே இந்த திடீர் அதிரடி முடிவாம்.
2. கலைஞர் குழும உயர் அதிகாரி ஒருவருக்கும் சோசியல் மீடியா சென்னை நிர்வாகத்துக்கும் கடந்த பல மாதங்களாக நடந்த பனிப்போரின் விளைவே இது என்றும் கூறுகிறார்கள். கடைசியில் குடும்பமே வென்றதாம். இதனை கொண்டாடும் விதமாக இன்று பணிக்கு வந்த பெரும்பாலான அலுவலர்களை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் மதிய விருந்து வைத்து மகிழ்ந்தாராம்.
3. இந்த மார்கெட்டிங் முறையை அமுல்படுத்தியவர் கலைஞர் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் திரு சரத்குமார் ஆகும். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் இருவது சதவீதம் பங்குதாரரும் ஆவார். நவம்பரில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பின்னர் இவர் கலைஞர் டிவி வருவதே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அவரே இல்லாதபோது, இவர்களுக்கு என்ன வேலை என்று செயல்பட்டதால் நடந்த வேலை இது என்றும் கூறுகிறார்கள்.
இவ்ளோ விஷயம் இருக்கா? என்னமோ நடக்குது..ஹ்ம்ம்..